பட்ஜெட் 2021 : தேசிய வகை, தேசிய வகை சீனப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கப் புதிய சூத்திரம்

கல்வி அமைச்சின் பராமரிப்பு ஒதுக்கீட்டை விநியோகிப்பதற்கான புதிய சூத்திரத்தின் வழி, தேசியப் பள்ளிகள் மற்றும் தேசிய வகை சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மற்ற அனைத்து தேசிய வகைப் பள்ளிகளும் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் குறைப்பைக் காணும், உறைவிடப் பள்ளிகள், முபாலிக் மற்றும் சீன இடைநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மதப் பள்ளிகள் போன்றவை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய குறைப்பைக் காணும்.

இருப்பினும், சராசரியாக கணக்கிடும்போது, ​​ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரே ஒதுக்கீடுதான் கிடைக்கும்.

சுருக்கமாக, அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும், அதிக எண்ணிக்கையிலான தேசிய வகைப்பள்ளிகள் அதிக ஒதுக்கீடுகளைப் பெறும்.

சிறிய எண்ணிக்கையிலான அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, குறைவான நிதி கிடைக்கும்.

மக்களவையில், கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் வழங்கியப் பட்டியலின்படி, இடைநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள், அடுத்த ஆண்டு RM477.48 மில்லியன் ஒதுக்கீட்டைப் பெறும், இந்த ஆண்டிற்கான RM300 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது, 57.7 விழுக்காடு அதிகம்.

தேசிய வகை சீனப்பள்ளிகளுக்கு (அரசு மற்றும் அரசு உதவி) அடுத்த ஆண்டு RM74.07 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு RM50 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது, 48.1 விழுக்காடு அதிகமாகும்.

இந்த இரண்டு வகையான பள்ளிகளும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகளை உள்ளடக்கியது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள 10,223 பள்ளிகளில், மொத்தம் 7,694 அரசுப் பள்ளிகளும், மேலும் 1,300 பள்ளிகள் தேசிய வகை சீனப்பள்ளிகளும் ஆகும்.

மற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒதுக்கீடு குறைப்பு, குறிப்பாக உறைவிடப் பள்ளிகள் (91.44 % குறைப்பு), சீன இடைநிலைப்பள்ளிகள் (79.5 % குறைப்பு) மற்றும் அரசு உதவி பெறும் மதப் பள்ளிகள் (75.54 % குறைப்பு) காணும்.

தேசிய வகை தமிழ்ப்பள்ளிகள் (அரசு மற்றும் அரசு உதவி) 40 விழுக்காடு குறைப்பு கண்டுள்ளன – 2020 ஆம் ஆண்டில் RM50 மில்லியன் ஒதுக்கீட்டில் இருந்து அடுத்த ஆண்டு RM29.98 மில்லியனாக. நாடு முழுவதும் 527 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

தெளிவான, எளிமையான கணக்கீடு

நேற்று, ராட்ஸி விரிவான ஓர் ஊடக மாநாட்டை வழங்கினார்.

பராமரிப்பு ஒதுக்கீட்டிற்கான மொத்த RM620 மில்லியன், ஆரம்பத்தில் நாடு முழுவதும் உள்ள 10,223 பள்ளிகளுக்கு வகுக்கப்பட்டது, ஒரு பள்ளிக்கு சராசரியாக RM60,648 ஒதுக்கீடு.

இந்தச் சராசரியைப் பயன்படுத்தி, அரசு நிதியளிக்கும் 90 விழுக்காடு பள்ளிகள், மொத்தம் 1,930 பள்ளிகள், RM105.34 மில்லியன் ஒதுக்கீட்டைப் பெறும்.

மீதமுள்ள RM514.66 மில்லியன், 8,293 அரசு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

அதாவது, அரசு பள்ளிகளுக்கு 83 விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 17 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்படும்.

“அரசுப் பள்ளிகள் அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்க உதவிப் பள்ளிகளுக்கும் முடிந்தவரை நாங்கள் உதவுகிறோம்.

“இந்த விழுக்காடு (ஒதுக்கீடு) மிகவும் மிதமானது என்று நான் நினைக்கிறேன்,” என்று ராட்ஸி கூறினார்.

கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட காரணிகளைப் பற்றி கேட்டதற்கு, ராட்ஸி, பள்ளிகளின் வகை, பிரிவு மற்றும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டதாகக் கூறினார்.

“இது ஒரு தெளிவான மற்றும் எளிமையான கணக்கீடு. வேறு எந்தக் காரணிகளும் இதில் இல்லை. இது மிகவும் வெளிப்படையானது, என்னைப் பொறுத்தவரை இந்தக் கணக்கீடு அனைவருக்கும் புரியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பள்ளிகள் அதிக ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

பராமரிப்பு ஒதுக்கீட்டைத் தவிர்த்து, கல்வியமைச்சு கூடுதலாக பின்வரும் ஒதுக்கீடுகளையும் வழங்குகிறது:

அரசு கல்வி நிறுவனங்களுக்கு RM50 மில்லியன்

சாய்வு நிலையிலான பழுதுபார்ப்பு RM50 மில்லியன்

அரங்குகள் மற்றும் பிற வசதிகளை உருவாக்க மற்றும் மேம்படுத்த RM50 மில்லியன்

நெருக்கடி கால கூடுதல் நிதியாக RM30 மில்லியன்

இந்த நெருக்கடி கால கூடுதல் நிதி, RM30 மில்லியனுக்கும் குறைவான ஒதுக்கீட்டில் உள்ள பள்ளிகளுக்கு, அவசர பழுது தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று ராட்ஸி விளக்கினார்.

இதன் அடிப்படையில், அரசு மற்றும் தேசிய வகை சீனப்பள்ளிகளைத் தவிர, அனைத்து வகை பள்ளிகளும் இந்த நெருக்கடி கால கூடுதல் நிதிக்கு விண்ணப்பிக்க முடியும்.