‘நானும் எனது நண்பர்களும் 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க முடிவு எடுத்துள்ளோம்’

2021 வரவுசெலவுத் திட்டத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, அவரும் அவரது “நண்பர்களும்” அதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசியக் கூட்டணி (பி.என்) அரசு தயாரித்த பட்ஜெட், வாக்களிக்கப்படுவதற்கு முன்னதான அதைப் பற்றிய விவாத செயல்முறைகள் ஏமாற்றமளித்ததாக கூறிய அவர், பொதுமக்களும் அதை பார்த்திருக்க முடியும் என்று கூறினார்.

“வரையறுக்கப்பட்ட விவாதத்தைத் தவிர, எம்.பி.க்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைக் கேட்கவோ ஏற்றுக்கொள்ளவோ பி.என். அரசு தயாராக இல்லை.

“இதன் காரணமாக, நானும் எனது நண்பர்களும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க முடிவெடுத்தோம்,” என்று லங்காவி எம்.பி.யான அவர், சமீபத்திய வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தார்.

மகாதீரின் பெஜூவாங் கட்சி தற்போது நான்கு எம்.பி.க்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், “நண்பர்கள்” என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று மகாதீர் விளக்கவில்லை, அது சபாவின் வாரிசான் கட்சியா – அக்கட்சி எப்போதும் அவருடன் ஒத்துப்போகும் – அல்லது பக்காத்தான் ஹராப்பானா என்று தெரியவில்லை.

எதிர்க்கட்சியைத் தவிர, சில அம்னோ எம்.பி.க்களும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பட்ஜெட்டை ஆதரிக்க ஒப்புக்கொள்வோம் என்று சூசகமாக தெரிவித்தனர்.

பட்ஜெட்டில் திருப்தியடையாதவர்களில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஆகியோரும் அடங்குவர்.