ஜோ லோ உண்மையில் சீனாவில்தான் இருக்கிறாரா என்று ஹிஷாமுதினுக்குத் தெரியாது

மக்களவை  | 1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய, சர்ச்சைக்குரிய தொழிலதிபர் லோ தேக் ஜோ , உண்மையில் சீனாவில் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார்.

தப்பியோடிய அத்தொழிலதிபர் ஒருவேளை அங்கு இருந்தால், அவரை அழைத்து வர, விஸ்மா புத்ரா மலேசியக் காவல்துறைக்கு உதவாததற்கு எந்த காரணமும் இல்லை என்று ஹிஷாமுதீன் விளக்கினார்.

கடந்த 2018, டிசம்பர் 4-ம் தேதி, 1எம்டிபி விசாரணைக்கு உதவ, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜோ லோவுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்தது.

ஜொ லோ 1எம்டிபி நிதி முறைகேடு வழக்கில் ஈடுபட்டது மட்டுமின்றி, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஒரு முக்கிய சாட்சியாகவும் உள்ளார்.

அப்போதிருந்து, அந்த நபரை மலேசியாவுக்கு அழைத்து வர மலேசிய அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஜூலை 5, 2018-ல், ஜோ லோ சீனாவின் மக்காவ் நகருக்குத் தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

அதே ஆண்டு, அக்டோபர் 22-ஆம் தேதி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹிஷாமுதீன் 1எம்டிபி வழக்கைத் தீர்ப்பதற்காக, தொழிலதிபரைக் கண்டுபிடிக்க முன்வந்தார்.

இது தனிப்பட்ட முடிவு என்றும், புத்ராஜெயாவின் கோரிக்கை அல்ல என்றும் அவர் கூறினார்.

ஜோ லோவைக் கண்டுபிடிப்பதற்கான தனது நோக்கம், சில தரப்பினர் கூறியதுபோல, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையில் இருந்து தப்பியோட அல்ல என்றும் ஹிஷாமுதீன் கூறினார்.