பட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.களுக்கு அகோங் நன்றி தெரிவித்தார்

இன்று மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வையும், நாட்டின் பொருளாதார மீட்சியையும் உறுதி செய்வதற்காக வழங்கப்பட்ட ஆதரவு இது என மன்னர் வரவேற்றதாக அரண்மனை பேச்சாளார் அஹ்மத் ஃபாடில் சம்சுதீன் தெரிவித்தார்.

“அதுமட்டுமின்றி, கடந்த 2020 அக்டோபர் 28 அன்று, தான் வழங்கிய ஆலோசனையை ஆதரித்த எம்.பி.க்களுக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அரசத் தலைவராக, அல்-சுல்தான் அப்துல்லா, ஒவ்வொரு அரசியல் கட்சியையும் மதிப்பதாகவும், மக்களின் நலனைப் பாதுகாப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பங்கையும் நம்பிக்கையையும் பாராட்டுவதாகவும் அவர் சொன்னார்.

முன்னதாக, இன்று மக்களவையில் வாக்களிப்பின் மூலம் 2021 வரவுசெலவுத் திட்டம் முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.