கொள்கை மட்டத்தில் 2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு தன்னை நெகிழ்வடையச் செய்ததாகப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.
“2021 பட்ஜெட்டிற்கு, மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்லவனாக இருப்பேன். பட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் நான் நெகிழ்ந்து போனேன்.
“அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த வரவுசெலவுத் திட்டத்தை தடையின்றி அங்கீகரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற நமது மாமன்னரின் கட்டளையை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள், குறிப்பாக நாடு கோவிட் -19 அச்சுறுத்தல்களுடன் போராடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்,” என்று அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக, அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த 2021 வரவு செலவுத் திட்டம், இன்று மக்களவை வாக்களிப்பின் மூலம் இறுதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருப்பினும், இன்றைய வாக்களிப்பு தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற, கடக்க வேண்டிய முதல் தடை.
இதன் பின்னர், மீண்டும் வாக்களிக்கப்படுவதற்கு முன்னர் அது குழு நிலையில் விவாதத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
“கொள்கை மட்டத்தில், 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்த அனைத்து எம்.பி.க்களுக்கும், குறிப்பாக தேசியக் கூட்டணியின், தேசிய முன்னணி, சரவாக் கூட்டணி கட்சி (ஜி.பி.எஸ்.) மற்றும் பார்ட்டி பெர்சத்து சபாவைச் (பிபிஎஸ்) சேர்ந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
“இந்த ஆதரவு, மற்ற விஷயங்களை விட, மக்களின் நலன், வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற இந்த முடிவு எம்.பி.க்களின் முதிர்ச்சியை நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், 2021 வரவுசெலவுத் திட்டத்தை சில மேம்பாடுகளுடன் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜஃப்ருல் அஜீஸையும் முஹைதீன் பாராட்டினார்.