‘பி.எச். பிரிந்திசை வாக்களிக்காததற்கு இதுவே காரணம்’

விமர்சனம் | நேற்று மதியம், நாடாளுமன்றத்தில் 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்கள், குறிப்பாக டிஏபி மற்றும் பி.கே.ஆர். பிரிந்திசை வாக்களிப்பு கேட்க ஏன் எழுந்திருக்கவில்லை என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

முதலில், 2021 வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? இல்லை என்பதே பதில்!

இன்று, விநியோக மசோதா 2021, இரண்டாவது வாசிப்பு நிலை அல்லது கொள்கை மட்டத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, விவாதம் அடுத்த திங்கட்கிழமை தொடங்கி குழு நிலையில் நடைபெறும்.

அதாவது, ஒவ்வொரு அமைச்சுக்குமான செலவுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அடுத்த திங்கட்கிழமை தொடங்கி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 எம்.பி.க்களால் பிரிந்திசை வாக்களிப்பு நடத்த வாய்ப்பு உள்ளது.

இன்று நாம் ஏன் வாக்களிக்கவில்லை? காரணம், முழு பட்ஜெட்டையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், முனைமுகப் பணியாளர்களுக்கு சிறப்பு கொடுப்பனவுகள், மக்களுக்குப் பண உதவி, முதலாளிகளுக்குச் சம்பள மானியம், போக்குவரத்துக்கான ஒதுக்கீடுகள் மற்றும் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் பிற ஒதுக்கீடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இருப்பினும், ‘ஜாசா’வுக்கான RM85 மில்லியன் ஒதுக்கீடு, தேசிய வகைப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளில் குறைப்பு போன்றவற்றை நாங்கள் ஆதரிக்கவில்லை, மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய பிற பிரச்சினைகளிளும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்

எனவே, அந்தந்த அமைச்சுகளின் உடன்படாத விதிகளை, குழு மட்டத்தில் நாங்கள் எதிர்ப்போம், நிராகரிப்போம்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பிரிந்திசை வாக்களிப்பு கேட்டு எழுந்து நின்று, நிராகரித்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். தேசியக் கூட்டணியில் இருந்து எப்படிபட்ட தாக்குதல்கள் வந்திருக்கும் என்று.

யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஆலோசனையைப் பக்காத்தான் ஹராப்பான் மீறிவிட்டது என்றும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதை விரும்பவில்லை என்றும், பி40 குழுவிற்கு உதவி செய்யக்கூடாது என்றும், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்நேரம் அவர்கள் குற்றம் சாட்டி இருப்பார்கள். பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் மக்களின் உணர்வுகளோடு அவர்கள் விளையாடுவார்கள்.

டிஏபி எம்.பி. குழுவுக்கு நாடாளுமன்றத் தலைவர் என்ற முறையில், எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றபின், எழுந்து நின்று, பிரிந்திசை வாக்களிப்பு கேட்க வேண்டாம் என்று டிஏபி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியதற்கான எனது முடிவுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.

பல டிஏபி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த முடிவில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதையும், எங்கள் நடவடிக்கைகளை விமர்சிப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். இந்த முடிவு தவறான முடிவு என்று நீங்கள் கருதினால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து டிஏபி எம்.பி.க்களும், அடுத்த திங்கட்கிழமை தொடங்கி “போராட்டம் தொடரும்” என்பதை உறுதி செய்வார்கள் என்று மட்டுமே நான் உறுதியளிக்க முடியும்.


அந்தோனி லோக் சிரம்பான் எம்.பி. & டிஏபி நாடாளுமன்றத் தலைவர்