நெடுஞ்சாலைக் கட்டணங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆய்வு செய்கிறது – அமைச்சர்

மலேசிய நெடுஞ்சாலைகளில், கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மற்றும் வழிமுறைகளை அரசாங்கம் நெடுஞ்சாலை சலுகையாளர் நிறுவனங்களுடன் சேர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

நெடுஞ்சாலை சலுகையாளர் நிறுவனங்கள், கட்டண விகிதங்களைக் குறைக்கும் நோக்கத்திற்காக, நிதி மறுசீரமைப்பு முறைகளை முன்மொழியலாம் எனப் பொதுத்துறை அமைச்சு அனுமதித்துள்ளதாக அதன் அமைச்சர் ஃபாடிலா யூசோஃப் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பான அனைத்து திட்டங்களும், பொதுத் துறை அமைச்சு, நிதி அமைச்சு, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை பிரிவு (யுகேஏஎஸ்), பிரதமர் துறை மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகள் இடையே முழுமையாய் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலை கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை தெரிவிக்குமாறு அமைச்சிடம் கோபிந்த் சிங் தியோ (பி.எச்-பூச்சோங்) கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது ஃபடில்லா இதனைக் கூறினார்.

இந்த வாரத் தொடக்கத்தில், ‘பிளஸ்’ நெடுஞ்சாலையைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் இன்னும் விவாதங்களில் இருப்பதாக, பொதுத் துறை துணையமைச்சர் எடின் சியாஸ்லீ கூறியிருந்தார்.

பிளஸுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் இலாபத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எடின் கூறினார்.

கட்டண விகிதங்களைக் குறைக்கும் முயற்சியில், தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் ஆறு நெடுஞ்சாலைகள் உட்பட, மொத்தம் 35 நெடுஞ்சாலைகளையும் ஒரே நெடுஞ்சாலை அறக்கட்டளையின் கீழ் வைக்க முந்தைய அரசாங்கம் திட்டமிட்டது.

முந்தைய அரசாங்கம் ஒப்புக்கொண்ட நெடுஞ்சாலை சலுகை நிபந்தனைகளும் மதிப்பாய்வு செய்யப்படும்.