மக்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) உறுப்புக் கட்சிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென டிஏபி இளைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று முந்தினம், கொள்கை மட்டத்தில் 2021 பட்ஜெட் வாக்கெடுப்பில், பிரிந்திசை வாக்களிப்பைத் தொடர வேண்டாம் என்ற அன்வாரின் கடைசி நிமிட அறிவுறுத்தலின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அன்வர் மன்னிப்பு கேட்க மறுத்தால், பி.கே.ஆர்.ருடன் “பிளவுபடுவதற்கும்”, எதிர்க்கட்சியை மறுசீரமைப்பதற்கும் டிஏபி பரிசீலிக்க வேண்டிவரும் என்று டிஏபி இளைஞர் பிரிவு செயலாளர் எரிக் தெஹ் ஹூங் கீட் கூறினார்.
“மக்களவையில் 2021 பட்ஜெட் பிரிந்திசை வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று டிஏபி மற்றும் பி.கே.ஆருக்கு அறிவுறுத்தியதை அன்வர் ஒப்புக் கொண்டார்.
“எனவே, அவர் தனது தவறுகளுக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும், மேலும், பி.எச். ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
“அன்வர் தனது மதிப்பீடு சரியானது மற்றும் துல்லியமானது என்று இன்னும் வலியுறுத்தினால், டிஏபி மத்தியத் தலைமைத்துவம் பி.கே.ஆரிடமிருந்து பிரிய வேண்டும், இனி பி.கே.ஆருடன் கூட்டணி வைக்கக்கூடாது, பி.எச்.-ஐ கலைத்துவிட்டு, மற்ற எதிர்க்கட்சிகளுடன் குறைந்தபட்ச ஒத்துழைப்பை ஏற்படுத்தட்டும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் அறிவித்த புதிய சலுகைகள் நிராகரிப்படுவதைக் காண விரும்பாததால், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரை பிரிந்திசை வாக்களிக்க வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாக அன்வர் முன்பு விளக்கினார்.
இதற்கிடையில், குழு மட்டத்தில் பிரிந்திசை வாக்குகளை எதிர்க்கட்சி உறுதி செய்யும் என்ற அன்வரின் விளக்கத்தை தெஹ் நிராகரித்தார்.
“இது போன்ற ஒரு விளக்கம் முற்றிலும் பொறுப்பற்றது. இரண்டாவது வாசிப்பு (கொள்கை நிலை) எம்.பி.க்கள் கொள்கை அடிப்படையில் தங்கள் நிலையைக் குறிப்பிடும் கட்டமாகும்.
“இரண்டாவது வாசிப்பில் பட்ஜெட் நிராகரிக்கப்பட்டால், மூன்றாவது வாசிப்பு அதன் தேவையை இழக்கிறது.
“பி.எச். தலைவர்கள் இரண்டாவது வாசிப்பு கட்டத்தில் பிரிந்திசை வாக்குகளைத் தவிர்த்துவிட்டனர், அடுத்தக் கட்டத்தில் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்வோம் என்று அவர் சொல்வதை ஆதரவாளர்கள் எப்படி நம்புவது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பிரிந்திசை வாக்குகளைத் தொடரத் தவறியது, தொடக்கத்திலிருந்து நாடாளுமன்றத்தில் டிஏபி போராட்ட வரலாற்றில் மிகவும் சங்கடமான ஒரு தருணம் என்றும் தெஹ் விவரித்தார்.
2021 வரவுசெலவுத் திட்டம், நேற்று முந்தினம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.