அன்வர் விமர்சனத்திற்கு உள்ளானபோது, மாட் சாபு ஒத்துழைப்பைத் தற்காத்தார்

மக்களவையில் 2021 பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து பி.கே.ஆர். தலைவரின் முடிவில் “கோபமும் ஏமாற்றமும்” இருப்பதாக முன்னர் அறிவித்த போதிலும், அன்வர் இப்ராஹிமுடன் கூட்டுறவைப் பேணுவேன் என்று அமானா தலைவர் மொஹமட் சாபு கூறினார்.

கூட்டணி அமைத்தப் பிறகு, “பிரித்தல் கடினம்” என்ற அவர், அதே நேரத்தில், கூட்டணியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், எதிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மாட் சாபு என்று நன்கு அறியப்பட்ட அவர், கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஒத்துழைப்பை உருவாக்கிய பின்னர், அன்வருடன் முரண்பட்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவை “வெளியேற்றவும் தாக்கவும்” மறுத்ததற்கும் அதுவே காரணம் என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் எப்போதும், கடந்த கால வேறுபாடுகளை மறந்துவிட்டு, பொதுவான ஒரு தளத்தைத் தேடுகிறோம், அது வெற்றியை விளைவிக்கிறது. அன்வர் தலைமையிலான பி.கே.ஆருடன் நாங்கள் பணியாற்றும்போது இதே நிலைதான்.

“மகாதீருடனான உறவிலும் இதேதான் நடந்தது.

“நாங்கள் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம், இருவரும் ஒரே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஊழல் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடினோம், ஒருவருக்கொருவர் தெரிந்துகொண்டோம், பிறகு எப்படி நான் அவரைச் சபிக்க முடியும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பி.எச்., குறிப்பாக அன்வரிடன் உள்ள உறவு குறித்து கருத்து தெரிவித்த மாட் சாபு, அது 20 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது, எனவே இது பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

“… எல்லா கட்சிகளுக்கும் பின்னால் அவர்களின் சொந்த பலவீனங்கள் உள்ளன, அவை மேம்படுத்தப்படலாம். எங்களுக்கு மிக முக்கியமானது ஒற்றுமை மற்றும் நட்பு,” என்று அவர் கூறினார்.