‘வந்த பாதையை மறந்துவிடாதீர்கள்’ – டிஏபி இளைஞர் பிரிவுக்கு ஏஎம்கே நினைவுறுத்தல்

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற டிஏபி இளைஞர்களின் அறிக்கை மற்றும் பி.கே.ஆருடன் “பிரிந்து செல்வதற்கான அச்சுறுத்தல்” மூர்க்கத்தனமானவை என்று சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்  (ஏ.எம்.கே) பிரிவின் தலைவர் நஜ்வான் ஹலிமி விவரித்தார்.

கடந்த வியாழக்கிழமை, மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கான பிரிந்திசை வாக்கெடுப்புக்கு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டாம் என்று அன்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டிஏபி இளைஞர் பிரிவுச் செயலாளர் தெஹ் ஹோங் கீயாட் வெளியிட்ட அறிக்கை குறித்து நஜ்வான் கருத்து தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையைச் சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சித்ததோடு, பி.எச். கூட்டணிக்கிடையில் குற்றச்சாட்டுகளையும் அது தூண்டியது.

நஜ்வானின் கூற்றுப்படி, பி.எச். அரசாங்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், பி.எச். தலைமை மன்றம் அன்வரை நம்பியுள்ளது, எனவே கட்சித் தலைவர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

“இம்முயற்சி எளிதானது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அமைச்சரவையின் 22 மாதங்களில், அன்வர் எந்தப் பதவியையும் வகிக்காத நிலையில் பிஎச் அரசாங்கத்தை இழந்தது.

“எனவே, அன்வரின் கைகளையும் கால்களையும் அசைக்காமல் கட்டிவிட்டு, அனைத்து சுமைகளையும் அவர்தான் சுமக்க வேண்டும் என்பது மிகவும் நியாயமற்றது.

“அத்தகைய அணுகுமுறை அன்வர் மற்றும் பி.கே.ஆரைக் கொடுமைப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை, அதே நேரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வலுப்படுத்த அன்வர் தனது போராட்டத்தை அர்ப்பணித்துள்ளார்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, தெஹ் மற்றும் டிஏபி இளைஞர்கள் தங்கள் கட்சித் தலைமையைக் குறிப்பிட்டு இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் முன், உண்மை நிலையை மறக்கக்கூடாது என்றார் அவர்.