தேசியக் கூட்டணியை (பி.என்.) நிறுவுவதற்கான யோசனை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அவர்களிடமிருந்து வந்தது என்று மூத்த அமைச்சர் முகமது அஸ்மின் அலி கூறினார்.
மகாதீரை இரு தரப்பிலிருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கும் ஒரு பிரதமராக மாற்றுவதே அதன் முகான்மை நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னணியிலும், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான பி.என்.-ஐ நிறுவுவதற்கு ஆதரவாகவும் இருந்த ஓர் அரசியல்வாதியான அஸ்மின், அக்டோபரில் பொதுத் தேர்தலை (ஜி.இ) நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றார்.
“பி.என். பின் கதவு அரசாங்கம் அல்ல, ஏனெனில் பிரதமர் பதவிக்கு ஒரு காலியிடம் இருந்தது, நான் அப்போது பரிந்துரைக்கவில்லை. மகாதீர் இராஜினாமா செய்த சம்பவம் நடக்கவில்லை என்றால், நாங்கள் உள்ளே செல்ல கதவைத் தட்டி, அவரை வெளியே அனுப்பியிருப்போம்.
“அது அவரது திட்டத்தில் இல்லை,” என்று தி ஸ்டார் போர்ட்டல் நடத்திய ஒரு சிறப்பு நேர்காணலில் அஸ்மின் கூறினார்.
பிப்ரவரி 23-ம் தேதி, மகாதீர் திடீரென இராஜினாமா செய்வதற்கு முன்பு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 131 எம்.பி.க்களைக் கொண்ட ஒரு சட்டக் கணக்கு (எஸ்டி) இஸ்தானா நெகாராவுக்கு வழங்கப்பட்டது என்று அஸ்மின் தெரிவித்தார்.
“அதில் பிரதமர் பதவிக்கு ஒருவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது – டாக்டர் மகாதீர்.
“மகாதீர் தொடர்ந்து பிரதமராக இருப்பதை உறுதிப்படுத்த, நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்,” என்று சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் உள்ள அஸ்மின் கூறினார்.
பி.எச். கூட்டணியில் மிகப்பெரிய கட்சியான பி.கே.ஆரின் தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் அதிகாரத்தை ஒப்படைக்க மகாதிர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு இந்த நடவடிக்கை முரணானது.
“பிப்ரவரி 23-ம் தேதி, மாலை 4 மணிக்கு நாங்கள் அவரது (மகாதீர்) வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த முடிவு அது, அந்தக் கூட்டத்தில் 6 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, வாரிசான் சபா கட்சியின் தலைவர் மொஹமட் ஷாஃபி அப்டால், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், சரவாக் கூட்டணி கட்சியின் (ஜி.பி.எஸ்) தலைவ அபாங் ஜொஹாரி ஓபேங் மற்றும் நானும் அங்கு இருந்தேன்,” என்று அஸ்மின் கூறினார்.
அக்டோபர் 6, 2019 அன்று, மலாய்க்காரர்கள் மரியாதை மாநாடு நடைபெற்றது, அன்வர் தவிர மற்ற அனைத்து தலைவர்களும் அதில் கலந்துகொண்டனர். மகாதிர் அம்னோ மற்றும் பாஸ் ஆகியோருடன் அம்மாநாட்டில் கலந்துகொண்டார். மகாதீரின் அந்நடவடிக்கை குறித்து, அன்வர் கேள்வி எழுப்பியதையும் அஸ்மின் குறிப்பிட்டார்.
“மகாதீர் பதவி விலகியபோது நாங்கள் ஓர் அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டோம்.
“முஹைதீன் செயல்படவில்லை என்றால், யாராவது ஒருவர் இஸ்தானா நெகாராவுக்குச் சென்று, பிரதமராக விண்ணப்பிக்கலாம். நான் அதை நடக்க விடமாட்டேன்.
“எனக்கும் முஹைதீனுக்கும் இருந்த தேர்வு, பி.எச்.-ஐ விட்டு வெளியேறுவதுதான்,” என்று முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவரான அஸ்மின் கூறினார்.
பிப்ரவரி 24 முதல் 28 வரை, மகாதீர் இடைக்காலப் பிரதமரானபோது, எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அவர் கடுமையாக உழைத்தார் என்று அஸ்மின் மேலும் கூறினார்.
“ஆதரவு இல்லாமல், எதுவும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாததால், மத்திய அரசியலமைப்பின் படி, பிரதமராக ஆக யாருக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை அகோங் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
“இறுதியாக, முஹைதீனுக்கு ஆதரவு கிடைத்தது. நிச்சயமாக நாங்கள் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தோம், தேர்தல்கள் மூலமாக அல்ல, அரசியல் நெருக்கடிகளின் மூலமாக.
“அந்தத் திங்கட்கிழமையன்று மகாதீர் இராஜினாமா செய்திருக்காவிட்டால், அவர் பெரும்பான்மையுடன் தொடர்ந்து பிரதமராக இருப்பார்,” என்று அஸ்மின் கூறினார்.
‘நாங்கள் நுழைவதற்கானக் கதவை அகோங் திறந்துவிட்டார்’
தேசியக் கூட்டணி பின் கதவு அரசாங்கம் என்ற குற்றச்சாட்டுகளை அஸ்மின் மறுத்தார்.
“அகோங் நாங்கள் நுழைவதற்கான கதவைத் திறந்துவிட்டார், எனவே தேசியக் கூட்டணி அரசாங்கம் பின் கதவு அரசாங்கம் அல்ல,” என்று அவர் உறுதியாக கூறினார்.
மேலும் கூறுகையில், மகாதீரை விட முஹைதீனைத் தான் தேர்வு செய்யவில்லை என்றும் கூறினார்.
“முஹைதீனை வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்தத் தொற்றுநோய் காலத்தின் தாக்கத்தின்போது.
“என்ன சொன்னாலும், முஹைதீன் நன்றாகப் பணியாற்றினார் என்று நான் நினைக்கிறேன் – கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார விஷயங்களை நிர்வகிப்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறார்,” என்று அவர் கூறினார்.
கோவிட் -19 தாக்கம் இல்லாதிருந்தால், கடந்த மாதம் தேர்தல் நடந்திருக்கும் என்றும் அஸ்மின் ஒப்புக்கொண்டார்.
“எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தாலும், தயக்கத்துடன், அது ஒரு சிறிய பெரும்பான்மையே என்று என்னால் கூற முடியும்.
“மெல்லியப் பெரும்பான்மை கொண்ட அரசாங்கம், பலவீனமான அரசாங்கம்.
“அரசாங்கம் பலவீனமாக இருக்கும்போது (அல்லது) நிலையற்றதாக இருக்கும்போது, மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்த முடியாது.
“நீங்கள் என்னிடம் கேட்டால், நிச்சயமாக நாங்கள் ஆணையை மக்களுக்கு திருப்பித் தருவோம். நீங்கள் என்னிடம் கேட்டால், அடுத்த மாதம் தேர்தலை நடத்த வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் கோவிட் -19 தொற்றை எதிர்கொண்டிருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்தத் தேர்தல் இனி அண்மையில் வருவதை யாரும் விருப்பவில்லை என்பதையும் அஸ்மின் ஒப்புக் கொண்டார்.
“மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, கோவிட் -19 பரவலைக் குறைத்து, வேலைவாய்ப்பு மற்றும் உணவு விஷயங்களில் உதவி கிடைப்பதை உறுதிசெய்யும் ஓர் அரசாங்கத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்,” என்ற அவர், மலேசிய சுகாதார அமைச்சு மட்டுமே தேர்தல்களை நடத்துவதற்கான பச்சை விளக்கைக் கொடுக்க முடியும் என்றும் சொன்னார்.