துணைப் பிரதமர் பதவியைக், கட்சிக்குக் கொடுக்க வேண்டுமென்று, பிரதமரை வற்புறுத்த வேண்டாம் என டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இன்று அம்னோ தலைவர்களிடமும் உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
துணைப் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு முழுமையாக உள்ளது என்று அம்னோ தலைவருமான அவர் கூறினார்.
“எனவே, கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றாலும், துணைப் பிரதமர் பதவியின் ஊகம், விளக்கம் அல்லது எந்தவொரு பகுப்பாய்வையும் பொதுவில் விவாதிக்க வேண்டாம், நியமனம் செய்வதற்கான உரிமை பிரதமருடையது.
“எந்தவொரு கட்சியும் அப்பதவியைக் கேட்கலாம், ஆனால் வலியுறுத்துவதில் இருந்து விலகியிருக்க வேண்டும், ஏனென்றால் நாம் பிரதமருக்குள்ள அதிகாரத்தை மதிக்க வேண்டும்,” என்று பாகான் டத்தோ எம்.பி.யுமான அஹ்மத் ஜாஹித், இன்று ஊத்தான் மெலிந்தாங்கில் மக்கள் சந்திப்பின் போது கூறினார்.
அம்னோ துணைத் தலைவரான இஸ்மாயில் சப்ரி யாகோப், ஓர் உள்ளூர் செய்தித்தாளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், அம்னோ தலைவர்களால் நிரப்பப்பட வேண்டியத் துணைப் பிரதமர் பதவி, மக்களவையில் 2021 பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் எழுப்பப்படும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், அம்னோ அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்டிருந்தாலும், நான்கு மூத்த அமைச்சர் பதவிகளில், தான் வகிக்கும் ஒன்றைத் தவிர, தற்போது அமைச்சரவையில் அம்னோ தலைவர்களுக்கு மிக உயர்ந்த பதவி வழங்கப்படவில்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
- பெர்னாமா