நான் இன்னும் டாக்டர் மகாதீரை மதிக்கிறேன் – அஸ்மின்

தேசியக் கூட்டணி (பி.என்.) நிறுவப்பட்டதைத் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவைத் தன் மரியாதைக்குரிய ஒரு நபராக பார்ப்பதாக மூத்த அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.

“எனக்கு இன்னும் டாக்டர் மகாதீர் மீது அன்பு, மரியாதை உண்டு.

“இருப்பினும், எங்களிடம் முன்கூட்டியேத் தெரிவிக்காமல், பிப்ரவரி 24 அன்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த அவரது நடவடிக்கைக்கு நான் உடன்பட மாட்டேன்,” என்று தி ஸ்டார் போர்ட்டலுக்கான சிறப்புப் பேட்டியில் அவர் கூறினார்.

மகாதீரின் அந்தத் திடீர் முடிவு, 131 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்த வேண்டுமெனும் தனது திட்டத்தை முறியடித்து, அவருக்குப் பதிலாக முஹைதீனைப் பிரதமராக்கக் கட்டாயப்படுத்தியது என்று அவர் மேலும் சொன்னார்.

“நான் அன்வர் இப்ராஹிமுக்கு (அவரது உதவியாளராக) 15 ஆண்டுகள் பணியாற்றினேன், ​​1998-ல் வெளியேற்றப்பட்ட பின்னர் அரசியலில் தீவிரமாக இருக்க நான் ஆர்வம் காட்டவில்லை.

“பின்னர் நான் மக்களுடன் இருந்தேன், சீர்திருத்தத்தில் ஈடுபட்டேன், பின்னர் ஓர் அரசியல் (பி.கே.ஆர்.) கட்சியில் இணைந்தேன்.

“நான் அரசியலை விரும்பவில்லை. பி.கே.ஆரில், 2008-ல், சிலாங்கூரில் வென்றபோது நான் நிராகரிக்கப்பட்டேன்,” என்று அஸ்மின் குறிப்பிட்ட அவர், காலித் இப்ராஹிமை சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமித்ததைச் சுட்டிக்காட்டினார்.

“அன்வர் அவரைக் கருத்தில் கொள்ளாமல் நீக்கியபோது, அவருக்குப் பதிலாக (காலிட்’டின் இடம்) அன்வரின் எண்ணத்தில் நான் இல்லை.

“கடவுளின் சக்தியால், நான் சிலாங்கூர் மந்திரி பெசார் ஆனேன். நான் கடுமையாக உழைத்தேன், கடந்த 2018 பொதுத் தேர்தலில், முதன்முறையாக சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் 51.56 சதவீத வாக்குகளைப் பெற்றது.

“சிலாங்கூரில் பி.எச். அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், எனது பெயர் அங்கு இல்லை.

“மத்திய அரசாங்கத்திற்குச் செல்லும்படி என்னிடம் கூறப்பட்டது, சிலாங்கூரில் இருந்து மத்திய அரசுக்குச் செல்ல, அகோங்கின் ஒப்புதலைப் பெற சிலாங்கூர் சுல்தானுடன் சென்றேன்,” என்று அஸ்மின் கூறினார்.

பி.எச். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பங்களித்த, அன்வர் மீதான விரோதப் போக்கிற்கு, அவர் மீது குற்றம் சாட்டக்கூடாது என்று அஸ்மின் வலியுறுத்தினார்.

“நான் அவருக்காக 30 ஆண்டுகள் சேவை செய்தேன் – அதிகாரப்பூர்வமாக, அவர் கல்வி அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் துணைப் பிரதமராக இருந்தபோது 15 ஆண்டுகள்.

“அவர் சிறையில் இருந்தபோது, அவருடைய குடும்பத்தையும் நான் கவனித்தேன். வெளியே வந்த பிறகு அவர் ஒரு சிறந்த மனிதராக ஆனார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

“துரதிர்ஷ்டவசமாக, அவர் ஓர் எரிச்சலூட்டும் நபராக மாறினார் – எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும்.

“அவரது ஊழியர்கள் அனைவரும், அவரை விட்டு வெளியேறியதை நீங்கள் காணலாம்,” என்று அன்வாரை விட்டு வெளியேறியது அவர் மட்டுமல்ல என்பதை அஸ்மின் விளக்கினார்.