கோவிட் 19 : இன்று 1,309 புதியத் தொற்றுகள், 493 பாதிப்புகளுடன் கோலாலம்பூர் முன்னிலையில்

நாட்டில், இன்று மதியம் வரையில், 1,309 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட 1,000 பாதிப்புகள், தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மையமாக இருந்த சபாவுக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளன.

கிழக்கு மலேசியாவில் மொத்தம் 325 புதியப் பாதிப்புகளும், தீபகற்ப மலேசியாவில் 984 புதிய நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

தீபகற்பத்தில் புதியப் பாதிப்புகளில் பெரும்பகுதி கோலாலம்பூர் (493) மற்றும் சிலாங்கூரில் (238) பதிவாகியுள்ளன.

அதேசமயம், இன்று 1,333 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோலாலம்பூரில் கண்டறியப்பட்டப் பெரும்பாலான பாதிப்புகள், கட்டுமான இடங்களில் உள்ள திரளைகளின் காரணமாக நேர்ந்தவை என்று ஓர் அறிக்கையில் விளக்கினார்.

கோலாலம்பூரில் பதிவான 493 புதிய தொற்றுகளில், 473 கட்டுமான தளத் திரளைகளிலிருந்து வந்தவை என்று அவர் கூறினார்.

அவசரப் பிரிவில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 42 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் சபாவில் தலா 3 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் கோவிட் -19 தொற்றுக்கு பலியானவர் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது.

புத்ராஜெயா, சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கோலாலம்பூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சபாவில் 290, சிலாங்கூரில் 238, பேராக்கில் 77, கெடாவில் 52, பினாங்கில் 46, ஜொகூரில் 37, லாபுவானில் 35, நெகிரி செம்பிலானில் 32, கிளந்தானில் 6, திரெங்கானு, பஹாங் மற்றும் மலாக்காவில் தலா 1.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை :-

யாயாசான் திரளை – சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம்; சுங்கை மூலியா கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; பத்து லீமா திரளை – சபா, கோத்தா கினபாலு மாவட்டம்; ஹீலீர் திரளை – கிளந்தான், கோத்தா பாரு, தும்பாட், பாசீர் பூத்தே & பாச்சோக் மாவட்டங்கள்.