‘பொய் சொல்வதை அஸ்மின் நிறுத்த வேண்டும்’ – பெஜுவாங்

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணமான ஷெரட்டன் நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது ஈடுபட்டார் என்று அஸ்மின் அலி பொய் சொல்வதாகக் குவாங் சட்டமன்ற உறுப்பினர் சல்லேஹுதீன் அமிருதீன் தெரிவித்தார்.

“நான் ஷெராடன் ஹோட்டலில் இருந்தேன், துன் மகாதீர் மற்றும் முக்ரிஸ் ஆகியோருக்குத் தெரியாமல் எஸ்டி (சத்தியப்பிரமாணம்) சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

“(எனக்குக் கூறப்பட்டது) அவர்கள் தேசியக் கூட்டணி என்ற புதிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். பிரதமர் வேட்பாளர்களாக இருவர், துன் மகாதீர் மொஹமட் மற்றும் முஹைதீன் யாசின் ஆகியோர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதனால், பி.என். அரசாங்கத்தில் மகாதீர் அந்தப் பதவியை நிராகரித்தார் என்று பெஜுவாங்கில் உறுப்பினரான சல்லேஹுதீன் தெரிவித்தார்.

மகாதீர் தனது கொள்கைகளையும் கண்ணியத்தையும் ஒதுக்கி வைத்திருந்தால், 95 வயதான அவர், நாட்டின் எட்டாவது பிரதமராகி இருப்பார் என்று அவர் கூறினார்.

“துன் மகாதீர் பிரதமராக ஆவதற்காகத் தேசியக் கூட்டணியை உருவாக்க யோசனை கூறினார் என்று அஸ்மின் அபத்தமாகச் சொல்கிறார், பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுபவர் அஸ்மின்.

‘மக்கள் அஸ்மினை மன்னிக்க மாட்டார்கள்’

“அதிகாரத்திற்கான பேராசை நிறைந்த ஓர் அரசியல்வாதி அஸ்மின்,” என்று அவர் கூறினார், அம்னோ தலைவர் ஜாஹித் ஹமீடியைத் துணைப் பிரதமராக முஹைதீன் நியமிப்பதைத் தடுக்கும் நோக்கில்தான் அஸ்மினின் அறிக்கை வெளியிடப்பட்டது.

“முஹைதீனின் தற்போதைய உடல்நிலை காரணமாக, நிச்சயமாக, பிரதமராக வேண்டும் என்ற அவரது இலட்சியம் நிறைவேற்றப்படும்” என்று சல்லேஹுதீன் மீண்டும் கூறினார்.

பி.என். அரசாங்கத்தில் துணைப் பிரதமர் பதவி இல்லை. அதற்குப் பதிலாக முஹைதீன் நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்தார், அவர்களில் ஒருவர் அஸ்மின்.

பி.என்.-ஐ உருவாக்கியது, அஸ்மின் மற்றும் முஹைதீனின் தந்திரமான திட்டம் என்று பெஜுவாங் தகவல் பிரிவுத் தலைவர் உல்யா அகமா ஹுசமுடின் கூறினார்.

பி.எச். கவுன்சில் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர், மகாதீரை அகற்றுவதற்கான திட்டங்கள் இருப்பதாக அஸ்மின் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், கூட்டத்தின் போது, மகாதீருக்குப் பி.எச். முழு ஆதரவைக் கொடுத்ததால், அஸ்மின் கூறியது பேசப்படவில்லை.

“மகாதீரை நீக்க முடியவில்லை என்றாலும், துரோகிகள் இந்தத் திட்டத்தைத் தொடரவே விரும்பினர்.

“அஸ்மின் தனது விருப்பத்திற்கு ஏற்ப கதைகட்டுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் செய்ததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

“நாட்டின் இன்றைய அரசியல் நிலையற்றத்தன்மைக்கு அஸ்மின் மற்றும் முஹைதீனின் பேராசையே காரணமாகும்,” என்று அவர் கூறினார்.