இந்திரா வழக்கில் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பியுங்கள், ஐ.ஜி.பி.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  

மழலையர் பள்ளி ஆசிரியர் எம் இந்திராகாந்தி தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராகப் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென, தேசியக் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) உட்பட நால்வருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை, இ-மறுஆய்வு (இயங்கலை) வழக்கை நிர்வகிக்கும் போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடந்த அக்., 28 ல், இந்திரா காந்தி ஐ.ஜி.பி (வழக்கில் குறிப்பிடப்படவில்லை), அரச மலேசியக் காவல்துறை, உள்துறை அமைச்சு மற்றும் மலேசிய அரசாங்கம் மீது வழக்குத் தாக்கல் செய்தார்.

தனது முன்னாள் கணவர் முகமது ரிட்டுவான் அப்துல்லாவைக் கண்டுபிடிக்க மறுப்பதாகவும், தனது மகள் பிரசானா திக்ஸாவை மீட்டெடுக்கத் தவறியதாகவும் கூறி அவர் காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்தார்.

ரிட்டுவானால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரசானாவின் பாதுகாவலை மீண்டும் பெற இந்திரா போராடுகிறார்.

வழக்கு நிர்வாகத்தின் முடிவை, இந்திராவின் வழக்கறிஞர் இராஜேஷ் நாகராஜன் இன்று காலை உறுதிப்படுத்தினார்.

“நீதிமன்றம், 2020 டிசம்பர் 2 அல்லது அதற்கு முன்னதாகப், பிரதிவாதி பாதுகாப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

“டிசம்பர் 16, 2020 அன்று அல்லது அதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அறிக்கைக்கு எதிராக, வாதி ஓர் எதிர்ப்புக் கோரிக்கையை வைப்பார்.

“இ-மறுஆய்வு மூலம் அடுத்த வழக்கு நிர்வாகம், டிசம்பர் 30, 2020-ல் நடைபெறும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அடுத்த வழக்கு நிர்வாகத்திற்கு முன், ஓர் இடைக்கால விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் இராஜேஷ் கூறினார்.

சம்மன்களின் நகல், நான்கு பிரதிவாதிகளிடமும் நவம்பர் தொடக்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி மாதம், ஐ.ஜி.பி., இந்திராவின் முன்னாள் கணவர் ரிட்டுவானின் இருப்பிடம் தனக்குத் தெரியும் என்றும், சரணடையும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

பிரசானாவுடன் தப்பி ஓடிய ரிட்டுவானைத் தடுத்து வைக்க, மத்திய நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளப் போதிலும் ஐ.ஜி.பி. அதனைச் செய்யவில்லை.

பிரசானா குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை – முன்பு கே பத்மநாதன் என்று அழைக்கப்பட்டவர் – 2009-ல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, பிரசானாவுடன் தப்பி ஓடினார்.

ரிட்டுவான் ஒருதலைப்பட்சமாகப் பிரசானாவையும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் இஸ்லாத்திற்கு மாற்றியதால் ஏற்பட்ட சிக்கலால், ரிட்டுவானும் இந்திராவும் நீதிமன்ற உதவியை நாடினர்.

2014-ஆம் ஆண்டு, பிரசானாவை அவரது தந்தையிடமிருந்து எடுக்கும்படி ஈப்போ உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

2016-ல், ரிட்டுவானைத் தடுத்து வைக்க ஐ.ஜி.பி.க்கு மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2018-ம் ஆண்டில், குழந்தைகளை மதம் மாற்ற, பெற்றோர்கள் இருவரின் அனுமதியும் தேவை என்பதால், ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றியது செல்லாது என்று பெடரல் நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

ரிட்டுவானுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணையையும் பிறப்பித்தது.

இந்திரா காந்தி சமர்ப்பித்த சம்மனின் நகலின் படி, ஐ.ஜி.பி. 30 மே, 2014 அன்று, ஈப்போ உயர்நீதிமன்றம் வெளியிடப்பட்ட இரண்டு உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறப்படுகிறது.

முதல் உத்தரவு, பிரசானாவை இந்திராவிடம் ஒப்படைக்கத் தவறியதற்காக ரிட்டுவானைச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவு. இரண்டாவது, ரிட்டுவானிடம் இருந்து பிரசானாவை எடுத்து, இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு.