‘வெளிநாட்டில் பிறந்த மலேசியப் பெண்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்படாது’

மக்களவை l வெளிநாட்டினரைத் திருமணம் செய்துகொண்ட மலேசியப் பெண்களுக்கு, வெளிநாட்டில் குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு இந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மலேசியப் பெண்களுக்கு வெளிநாட்டு கணவர்களுடன், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள், இரட்டைக் குடியுரிமை பெறுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்தக் கொள்கை என்று உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் முகமது சைட் மக்களவையில் தெரிவித்தார்.

“ஏனென்றால், பிற நாடுகளும், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் தங்கள் தந்தையின் குடியுரிமையைப் பின்பற்றும் கொள்கையைக் கடைபிடிக்கின்றன.

“குழந்தைகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறை, ஆக, நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்று நட்ரா இஸ்மாயிலின் (பி.கே.ஆர்-செகிஞ்ஜாங்) கேள்விக்குப் பதிலளிக்கும் போது இஸ்மாயில் கூறினார்.

“தந்தையைப் பின்பற்றி குடியுரிமை பெறாதக் குழந்தைகள், மத்திய அரசியலமைப்பின் பிரிவு 15 (2) இன் படி விண்ணப்பிக்கலாம்.

“இது தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்புடைய ஒரு விடயமாகும், எனவே அதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மத்திய அரசியலமைப்பில், மலேசிய ஆண்களால் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்க உத்தரவாதம் உண்டு, ஆனால் மலேசியப் பெண்களால் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் குறித்து அதில் தெளிவாக இல்லை.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா இயோ, தங்கள் குழந்தைகளுக்குக் குடியுரிமை கோரும் மலேசியப் பெண்களின் சுமார் 40,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.