‘ம.இ.கா. மட்டுமே இந்தியர்களைக் கவனித்துக்கொள்கிறது என்று கருத வேண்டாம்’ – டி.எச்.பி.பி.

இந்தியச் சமூகத்தின் நலனை, ம.இ.கா. மட்டுமே கவனிக்கிறது என்றக் கருத்தை உருவாக்க வேண்டாம் என்று பாஸ் ஆதரவாளர்கள் மன்றம் (டிஎச்.பி.பி) இன்று ம.இ.கா.வைக் கேட்டுக்கொண்டது.

சமீபத்தில், கெடாவில் கோயில் இடிக்கப்பட்ட பிரச்சினை குறித்து டி.எச்.பி.பி தலைவர் என் பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த விவகாரம் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

“மஇகா 60 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்தபோதிலும், மலேசியாவில் உள்ள இந்தியச் சமூகத்தின் பெரும்பான்மையினரால் அவர்களின் தலைமை நிராகரிக்கப்படுகிறது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“எனக்கும் வறுத்தமாகதான் இருக்கிறது, இவ்வளவு அனுபவம் இருந்தபோதிலும், எழும் சிக்கல்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் எவ்வாறு தீர்வு காண்பது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.

“கிளந்தான் மற்றும் திரெங்கானு போன்ற பாஸ் தலைமையிலான பிற மாநிலங்களில், ம.இ.கா.வின் பிரதிநிதிகள் யாரும் இல்லை, ஆனால் அம்மாநிலங்களில் இந்தியர்களின் நலன் இன்னும் முழுமையாகக் கவனிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாலசுப்பிரமணியத்தின் கூற்றுப்படி, கோயில்கள் உடைக்கப்படும் பிரச்சினை, இன்று எழுந்துள்ள ஒரு புதிய பிரச்சினை அல்ல, இது தேசிய முன்னணி காலத்திலிருந்து இன்று தேசியக் கூட்டணி அரசாங்கம் வரை தொடர்ந்து வருகிறது.

“நாம் ஒருவருக்கொருவர் விரல் நீட்டி, குற்றம் சாட்டிக்கொண்டிருந்தால், இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாது.

“கெடா மந்திரி பெசாரின் தலைமையில் ம.இ.கா. திருப்தியடையவில்லை, இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டதால், அந்த மூத்த அரசியல்வாதியை அவர்கள் அவதூறாகப் பேசினர். இது ஒரு தவறான செயலாகும்.

“ஓர் அரசியல் கட்சியின் அறிவுறுத்தல்களைக் கேட்கவில்லை என்பதற்காக, அவரை முத்திரை குத்தி விமர்சிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.