கோவிட் 19 : இன்று 1,075 புதியத் தொற்றுகள், 11 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,075 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், 948 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்துள்ளனர். சபா, ஜொகூரில் தலா இருவரும், நெகிரி செம்பிலான், கிளந்தானில் தலா ஒருவருமாக மொத்தம் 11 பேர் இந்நோய்க்கு இன்று பலியாகியுள்ளனர். ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 376 எனப் பதிவாகியுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கு (47.3 %), சபா (28.8 %) மற்றும் ஜொகூரில் (7.3%) அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 46 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

459 புதிய சம்பவங்களுடன், சிலாங்கூர் தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சிலாங்கூரை அடுத்து சபாவில் 310, ஜொகூரில் 78 எனப் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலானில் 52, கோலாலம்பூரில் 49, பினாங்கில் 43, கெடாவில் 32, பேராக்கில் 26, கிளந்தான் மற்றும் லாபுவானில் தலா 9, பஹாங்கில் 4, மலாக்காவில் 2, சரவாக் மற்றும் திரெங்கானுவில் தலா 1.

மேலும் இன்று, சபாவில் 3 மற்றும் சிலாங்கூரில் 1 என மொத்தம் 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

மோன்சூன் திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; ஜாலான் கீலாங் திரளை – சபா, லாஹாட் டாத்து மாவட்டம்; பெர்டானா எனாம் திரளை – சபா, லாஹாட் டாத்து மாவட்டம்; ஜாலான் குபோத்தா திரளை – சபா, தாவாவ் மாவட்டம்.