ஏன் அவசரமாக கோயில் இடிக்கப்பட்டது என்பதை கெடா எம்பி விளக்க வேண்டும் – ம.இ.கா.

அண்மையில் கெடா மாநிலத்தில் ஒரு கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி, அம்மாநிலத்தின் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று மனிதவளத் துறை அமைச்சர் எம் சரவணன் கேட்டுக்கொண்டார்.

ம.இ.கா. துணைத் தலைவரான அவர், முஹம்மது சனுசியின் நடவடிக்கை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஜூலை மாதம் நடந்த ஒரு கூட்டத்தில், இனி ஏதேனும் கோயில் இடிக்கப்படுமானால், அவருக்கும், தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமது சடிக் இருவருக்கும் தெரிவிப்பேன் என்று மந்திரி பெசார் உறுதியளித்திருந்தார்.

“ஆனால், பேச்சுவார்த்தைகள் இன்றி, ஏன் அவசரமாக கோயில் இடிக்கப்பட்டது என்பதை கெடா மந்திரி பெசார் விளக்க வேண்டும்,” என்று அவர் கோலாலம்பூரில், அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று, அலோர் ஸ்டார் மாநகர் மன்றம், 50 ஆண்டுகளுக்கும் மேலானது என்று நம்பப்படும் கோல கெடா, தாமான் பெர்சத்துவில் அமைந்திருந்த ஸ்ரீ இராஜா முனிஸ்வரர் கோயிலை இடித்தது.

  • பெர்னாமா