பி.கே.பி.யின் போது வெளிநாட்டவர் தற்கொலை வழக்குகள் அதிகம் – என்.ஜி.ஓ.க்கள் கவலை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) காலகட்டத்தில், வெளிநாட்டவர் தற்கொலை புள்ளிவிவரங்கள் குறித்து வெளிநாட்டவர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.) கவலை தெரிவித்தன.

கோவிட் -19 தொற்றால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று தெனாகனீத்தா கூறியுள்ளது.

“காவல்துறையினர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்கள் மிகவும் கவலையளிக்கின்றன,” என்று தெனாகனீத்தா நிர்வாக இயக்குநர் குளோரீன் தாஸ் கூறினார்.

 

புகாரளிக்கப்படாத வழக்குகளும் இருக்கலாம், குறிப்பாக சரியான ஆவணங்கள் இல்லாத, வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இருக்கலாம் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

முந்தைய எச்.ஐ.வி. மற்றும் சார்ஸ் தொற்றுநோய்களிலிருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குளோரீன் பரிந்துரைத்தார், தயார்நிலை, எதிர்வினையாற்றுதல் மற்றும் மீட்புநிலை ஆகியவை மனித உரிமை கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

மியான்மர் ஊடகமான ‘தி இர்ராவடி’ , ஜூன் 17 அன்று, அந்நாட்டின் சட்டவிரோதத் தொழிலாளர்கள் சிலர் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள மியான்மர் தூதரக ஊழியர், யூ ஆவுங் ஜோவ் மின், இந்த விஷயத்தை அவர்கள் அறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றைத் தொடர்ந்து, மலேசிய அமலாக்க அதிகாரிகளின் அடக்குமுறையின் காரணமாக, ஆவணமற்றத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போனதால் பெரும்பாலான தற்கொலைகள் நேர்ந்துள்ளன என்று அவர் கூறினார்.

பதிவு செய்யப்படாதவையும் இருக்கலாம்

இதற்கிடையில், வடக்கு-தெற்கு முன்முயற்சியின் நிர்வாக இயக்குநர் அட்ரியன் பெரேரா, தற்கொலை செய்து கொண்டவர்கள் புதிதாக குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியிருக்கலாம், அவர்களின் நிதிப் பிரச்சினைகள் அதிகச் சுமையாக இருக்கக்கூடும் என்று கூறினார்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயது வரையிலானவர்கள்.

இறந்தவர் எண்ணிக்கை பதிவாகியதை விட அதிகமாகக்கூட இருக்கலாம் என்றும் பெரேரா கூறினார்.

சபா, சரவாக் போன்ற கிராமப்புறங்களில், தற்கொலைகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.