கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் சாரணி முகமதுவைப் புதிய பேராக் மந்திரி பெசாரா நியமிக்க பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் ஆதரவு அம்னோவுக்கு இருப்பதாக அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.
இன்று காலை, ஈப்போ, இஸ்தானா கிந்தாவில், பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அஹ்மத் ஜாஹித், இதற்கு முன்னர் தேசியக் கூட்டணி இடையிலான ஒப்பந்தத்தைப் பாதுகாக்க அம்னோ அதன் விருப்பத்தை வெளிப்படுத்தியதாக கூறினார்.
“ஆக, அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் அதை (சுல்தான் நஸ்ரினுக்கு) முன்வைத்துள்ளோம், பெரும்பான்மை ஆதரவு போதுமானதை விட அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
முன்னாள் துணைப் பிரதமருமான அவர், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இனி அரண்மனையால் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
“பேராக் மந்திரி பெசார் பெயருக்கான அறிவிப்பைச் சுல்தான் வெளியிடுவார், இதற்குப் பிறகு எந்தவொரு அறிக்கையும் அரண்மனையால் வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.