சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்திற்கு, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் பெனராசு இன்சான் அமைப்பு உதவியதைத் தொடர்ந்து, ஓட்டுநர்கள் சார்பில் சங்கத்தின் துணைத் தலைவர் பாலமுருகன் வீராசாமி தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்
கோவிட் -19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அமலாக்கம் கண்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து தொழில் துறையும் முடங்கியது, இதில் வாடகை வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கையும் வருமானமும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது என்று அவர் சொன்னார்.
அதைத் கருத்தில் கொண்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் அவர்கள், இங்குள்ள வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்தில், பதிவுபெற்ற ஓட்டுநர்கள் அனைவருக்கும் இயன்ற உதவித் தொகையை வழங்கினார்.
இதற்கிடையே, மழையாலும் புயலாலும் பழுதடைந்து கிடந்த வாடகை வாகன நிலையத்தை, திருமதி இராணி செல்வா தலைமையிலான ‘பெனராசு இன்சான்’ அமைப்பு சீரமைத்து கொடுத்ததும் குறிப்பிட்டத்தக்கது.
இவர்களைப் போல, அந்தந்தத் தொகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக இயக்கங்கள், வருமானம் இன்றி அல்லல்படும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவ வேண்டுமென அவர் வேண்டுகோளும் விடுத்தார்.
இவ்விருவருக்கும், சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் சார்பில், பாலமுருகன் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.