மக்களவை l போதைப்பொருள் வழக்குகள், மோசடி, பணப்பற்று அட்டை மோசடி மற்றும் சுங்கத்துறை & குடிநுழைவுக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 2,742 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள மலேசியப் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டதாகத் துணை வெளியுறவு அமைச்சர் கமாருடின் ஜாஃபார் தெரிவித்தார்.
தூதரக உறவுகள் தொடர்பான 1963 வியன்னா மாநாட்டிற்கு இணங்க, தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களுக்கு, தூதரக உதவிகளை வெளிநாடுகளில் உள்ள மலேசியத் தூதுக்குழுவினர் வழங்கி வருகின்றனர் என்றார் அவர்.
“இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தூதரக உதவிகள், குடும்பத்தினருக்கோ அல்லது அவரகளின் வாரிசுகளுக்கோ தடுப்புக்காவலைத் தெரிவிப்பது, கைதிகளின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது போன்றவை அடங்கும்,” என்று அவர் இன்று மக்களவையில் சொன்னார்.
தேவைப்பட்டால், கைதிகள் அல்லது வாரிசுகளால் நியமிக்கப்பட வேண்டிய உள்ளூர் சட்ட நிறுவனங்களின் பட்டியலை சமர்ப்பிக்கவும் மலேசியப் பிரதிநிதி உதவ முடியும் என்றார்.
வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு மலேசியரின் நலனிலும் அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்றும், தகுந்த உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கமாருடின் கூறினார்.
எவ்வாறாயினும், மலேசியத் தூதுக்குழு உள்ளூர் சட்ட நடைமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும், மேலும் ஒரு நாட்டின் சட்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருக்கும் அல்லது பயணம் செய்யும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், தேவையற்ற விஷயங்களில் சிக்குவதைத் தடுக்க நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
- பெர்னாமா