கோவிட் 19 : இன்று 959 புதியத் தொற்றுகள், பஹாங்கில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 959 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 5 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளையில், 1,068 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று, பஹாங் மாநிலம், மூன்றாவது அலையில், முதல் முறையாக மூன்று இலக்கங்களை எட்டி, 119 புதியப் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.

கெந்திங் மலையில், ஜாலான் கெந்திங் திரளை எனக் குறிப்பிடப்படும் மூன்று ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் மத்தியில் இது பரவியதை அடுத்து, பஹாங்கில் புதியப் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனையில் ஒருவர், ஜொகூர் குளுவாங் மருத்துவமனையில் இருவர், சபாவில் இருவர் என ஐவர் இந்நோய்க்கு இன்று பலியாகியுள்ளனர். ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 393 எனப் பதிவாகியுள்ளது.

277 புதிய தொற்றுநோய்களுடன் சிலாங்கூர் மீண்டும் முதலிடத்தில் உள்ளது, சபாவில் 203 மற்றும் கோலாலம்பூர் 129 எனப் பதிவாகியுள்ளன.

அவசரப் பிரிவில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

சரவாக், திரெங்கானு, புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 277, சபாவில் 203, கோலாலம்பூரில் 129, பஹாங்கில் 119, ஜொகூரில் 100, நெகிரி செம்பிலான் மற்றும் பேராக்கில் 33, பினாங்கில் 29, கிளந்தானில் 17, கெடாவில் 16, மலாக்காவில் 2, லாபுவானில் 1.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

குபி குபி திரளை – சபா, பெனம்பாங் மாவட்டம்; ஐகோன் பிந்தாங் கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் & கெப்போங் மாவட்டங்கள்; 3 மாநிலங்களை உள்ளடக்கிய பண்டார் இம்பியான் திரளை – ஜொகூர், குளுவாங் – கிளந்தான் பாசீர் பூத்தே – பேராக், கோல கங்சார் மாவட்டங்கள்; ஜாலான் கெமாங் திரளை – நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் மாவட்டம்.