பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக சாரணி

பேராக் அம்னோ தலைவர் சாரணி முகமது, பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக, நாளை காலை 11 மணிக்குப் பதவியேற்க உள்ளார்.

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அந்த கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் பெற்றுள்ளார் என்று சுல்தான் நஸ்ரின் முயிசுதீன் ஷா கருதுவதாக கிந்தா அரண்மனை பேச்சாளர், சற்றுமுன்னர் ஊடக அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

அஹ்மத் ஃபைசல் அஸுமுவுக்குப் பதிலாக, சாரணியை ஏற்றுக்கொள்வதற்கான ஓர் உடன்பாட்டைத் தேசியக் கூட்டணி எட்டிய சிறிது நேரத்திலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

தேசிய முன்னணி (பிஎன்) தலைவர் அஹ்மட் ஜாஹிட், மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு, பேராக் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து; இன்று மாலை, தேசிய முன்னணி, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள், சாரணியை மந்திரி பெசாராக நியமிக்க தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

கோலாலம்பூரில் இன்று, ஜாஹிட், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்புக்குப் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பேராக் மாநிலத்தில் தேசியக் கூட்டணி தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும்.