இவ்வாண்டு, 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர் துன்புறுத்தல் வழக்குகள் பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சில் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், 2,000-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகளை அமைச்சு இந்த ஆண்டு பதிவு செய்துள்ளது – ஒரு வருடம் கோவிட் -19 பரவலைச் சமாளிக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக மக்கள் வீட்டில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இன்று காலை, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி நடைபெற்ற ஒரு கருத்துரையாடலில், அமைச்சின் அதிகாரி கோலொனி குந்திங், இந்த எண்ணிக்கையில் போலீசில் புகார் அளிக்கப்படாத வழக்குகள் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.
அமைச்சு மற்றும் சமூக நலத்துறையின் ‘தாலியான் காசே 15999’-இன் தரவுகளில் இருந்து இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது.
“இன்றுவரை, எங்களிடம் 4,349 சிறுவர் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன […] குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்டவை.
“உடல் ரீதியாக, பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல்கள் (அத்துடன்) கைவிடப்பட்ட குழந்தைகள் போன்ற வழக்குகள் அதிகம் உள்ளன,” என்று அவர் தரவு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அந்த எண்ணிக்கையில், இந்த ஆண்டு 18 வயதுக்குட்பட்ட 1,263 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கோலோனி கூறினார்.
இந்த எண்ணை “மிக உயர்ந்தது” என்று விவரித்த கோலோனி, முந்தைய ஆண்டுகளின் வழக்கு எண் தரவுகளின் ஒப்பீட்டை வழங்கவில்லை. 2020 வழக்குகள் குறித்த விரிவான விளக்கத்தையும் அவர் வழங்கவில்லை.
மேலும் தகவல் பெற மலேசியாகினி அமைச்சைத் தொடர்பு கொண்டுள்ளது.
குடும்ப வன்முறை தரவு
இதற்கிடையில், கோலொனி 2020-ல் குடும்ப வன்முறை வழக்குகள் பற்றிய தரவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
“குடும்ப வன்முறையைப் பொறுத்தவரை, அதிலும் அதிகரிப்பையேக் காணமுடிகிறது.
“குடும்ப வன்முறை வழக்குகளில், 2,287 வழக்குகள் உள்ளன, அவை ‘தாலியான் காசே’ மூலமாக பதிவாகியவை,” என்று அவர் கூறினார்.
குடும்ப வன்முறை வழக்குகளின் ஒப்பீடுகளையோ விரிவான விவரங்களையோ அவர் வழங்கவில்லை.
மேலும் தகவலுக்கு, மலேசியாகினி அமைச்சைத் தொடர்பு கொண்டுள்ளது.
முன்னதாக, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரீனா ஹருண், இந்த ஆண்டு வழக்கத்தை விட 500 விழுக்காடு அதிகமான அழைப்புகள் ‘தாலியான் காசே’வுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
2020 ஜனவரி முதல் நவம்பர் வரை ‘தாலியான் காசே’வுக்கு 159,703 அழைப்புகள் வந்ததாக, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் துணையமைச்சர் சித்தி ஸைலா மொஹமட் யூசோஃப் கடந்த மாதம் மக்களவையில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அழைப்புகள் குறித்து அவர் முழு விளக்கம் அளிக்கவில்லை என்பதால் விமர்சிக்கப்பட்டார்.
இன்றையக் கருத்துகளம், மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), வெளியுறவு அமைச்சு, சட்ட விவகாரங்கள் துறை மற்றும் மலேசியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு ஏற்பாட்டில் நடந்தது.