மக்களவை | இன்று குழு நிலை விவாதத்திற்குப் பின்னர், மூன்று அமைச்சுகளுக்கான 2021 வரவு செலவுத் திட்டங்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சுக்கான பட்ஜெட் பிரிந்திசை வாக்கெடுப்பு மூலம் மாலை 5 மணிக்கு அங்கீகரிக்கப்பட்டது.
மொத்தம் 107 எம்.பி.க்கள், அமைச்சின் இயக்கச் செலவுகளுக்கான RM 1,197,464,900 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வாக்களித்தனர்.
100 எம்.பி.க்கள் எதிர்த்த வேளை, 13 பேர் வாக்களிப்பின் போது மக்களவையில் இல்லை.
சிறப்பு விவகாரங்கள் திணைக்களம் (ஜாசா) என்று முன்னர் அழைக்கப்பட்ட சமூகத் தொடர்புத் துறைக்கு (ஜே-கோம்) RM85.5 மில்லியனில் இருந்து RM45 மில்லியனைக் குறைப்பதற்கான ஒரு தீர்மானத்திற்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது.
முன்னதாக இன்று, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சுக்கான பட்ஜெட்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 22 அமைச்சுகளுக்கான செலவுகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அடுத்த திங்களன்று நாடாளுமன்றம் மீண்டும் தொடங்கும் போது மேலும் ஐந்து விவாதங்கள் நடைபெறும்.