நாட்டில், இன்று நண்பகல் வரையில், 2,234 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 70 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சிலாங்கூர் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, சிலாங்கூரில் மிகப்பெரிய பாதிப்பு, செருலிங் பணியிடத் திரளை சம்பந்தப்பட்டது.
புதிய வழக்குகள் முக்கியமாக காப்பார் மற்றும் கிள்ளான் வட்டாரத்தை உள்ளடக்கியது, ஆனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அது பரவியுள்ளது.
அதேவேளையில், 1,112 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சபாவில் இருவரும், லாபுவானில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர். ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 396 எனப் பதிவாகியுள்ளது.
அவசரப் பிரிவில் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 1,428, சபாவில் 274, கோலாலம்பூரில் 136, பேராக்கில் 115, ஜொகூரில் 100, நெகிரி செம்பிலான் 67, பஹாங்கில் 45, பினாங்கில் 42, கெடாவில் 14, திரெங்கானு மற்றும் கிளந்தானில் 3, மலாக்காவில் 2, புத்ராஜெயா மற்றும் சரவாக்கில் தலா 1.
மேலும் இன்று, 5 புதியத் திரளைகள், 3 கிள்ளான் பள்ளத்தாக்கிலும் 2 ஜொகூரிலும் கண்டறியப்பட்டுள்ளன.