அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் அடங்கிய குழு ஒன்று, நெரிசலான சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆய்வு செய்ய நிறுவப்பட்டுள்ளது.
நெருக்கமான சூழல்களினால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், இதுபோன்ற மையங்கள் கோவிட் -19 தொற்றுப் பரவலின் மையமாக மாறியுள்ளது.
அத்தகைய மையங்கள் குறைந்தது 40 விழுக்காட்டிற்கும் அதிகமான எண்ணிக்கையிலான பேரை வைத்துள்ளது என்று முன்னர் மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) கூறியிருந்தது. நாட்டில் உள்ள சிறைகளில் 53,830 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்க முடியும், ஆனால் 72,903 கைதிகள் அங்கு உள்ளனர்; மேலும், 12,530 பேரை மட்டுமே வைக்கக்கூடிய குடிநுழைவு தடுப்பு முகாம்களில் 15,163 கைதிகள் உள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் சீர்திருத்தத்திற்கான இருதரப்பு கட்சிகளின் கூட்டுத் தேர்வுக் குழுவில், அரசாங்கத்தின் சார்பில், ரோஹானி அப்துல் கரீம் (பதாங் லூபார் எம்.பி.), ரம்லி மொஹமட் நோர் (கேமரன் மலை எம்.பி.) மற்றும் செனட்டர் வேல் பாரி ஆகியோர் உள்ளனர்.
எதிர்க்கட்சி சார்பில், நூருல் இசா அன்வர் (பெர்மாத்தாங் பாவ் எம்.பி.), மொஹமட் அஜீஸ் ஜம்மான் (செபங்கார் எம்.பி.) மற்றும் செனட்டர் லீயூ சின் தோங் ஆகியோர் உள்ளனர்.
இந்தக் குழு தனது முதல் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) நடத்தியதாக, நேற்று இரவு ஓர் அறிக்கையில், மக்களவை துணை சபாநாயகரும் பெங்கெராங் எம்.பி.யுமான அசலினா ஓத்மான் சைட் அறிவித்தார்.
சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதை அடுத்து, இந்தக் குழு சரியான நேரத்தில் அமைக்கப்பட்டுள்ளது (7,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன), இதில் சிறைசாலை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 560 வழக்குகள் சேர்க்கப்படவில்லை.
“மேலும், சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை சிறைச்சாலைகளின் அளவை மீறி இருக்கிறது. இது மிகவும் கவலையளிக்கிறது, இதனைத் தீர்க்க உடனடி கவனமும் நடவடிக்கையும் தேவை,” என்று அவர் கூறினார்.