சரவாகில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில், சூரிய ஆற்றல் வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி, ரோஸ்மா மன்சோருக்கு எதிரான குற்றச்சாட்டின் வழக்கு விசாரணை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று முடிவடைந்தது.
RM187.5 மில்லியன் கேட்டது மற்றும் ஜெபக் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனர், சைடி அபாங் சம்சுடின் இடமிருந்து RM6.5 மில்லியன் கையூட்டு வாங்கியது தொடர்பான 2 இரண்டு வழக்குகள் ரோஸ்மாவுக்கு எதிராக விசாரணையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கிய இந்த வழக்கின், 33 நாள் விசாரணை அமர்வின் போது 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
ஐந்தாவது அரசு தரப்பு சாட்சியான, முன்னாள் கல்வியமைச்சர் மஹ்ட்சீர் காலித், இன்று காலை குறுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து, அரசு தரப்பு இன்று தனது வழக்கு விசாரணையை முடித்தது.
அவரது சொத்துக்கள் சிலவற்றைக் குறித்தும், ஜெபக் ஹோல்டிங்ஸுக்கு நிதி செலுத்தும் நடைமுறைக்குச் சிறப்பு விதிவிலக்கு அளிக்கக் கோரி, அப்போது நிதியமைச்சராக இருந்த நஜிப்புக்கு அவர் எழுதியக் கடிதம் பற்றியும் விளக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
நீதிபதி மொஹமட் ஜைய்னி மஸ்லான், டிசம்பர் 28-க்கு முன் எழுத்துப்பூர்வ வாதத்தைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், அரசு தரப்பு 2021 ஜனவரி 4-ஆம் தேதிக்கு முன் எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்ப்பிக்கும்.
வழக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வாய்வழி வாதங்களைக் கேட்க ஜைய்னி, அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதியை நிர்ணயித்துள்ளார்.