எஸ்.எம்.இ.-க்கள் கோவிட்-19 நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைக்க வாடகை நிவாரண நிதி வேண்டும் – கிள்ளான் எம்.பி.

கோவிட் -19 தொற்றினால் பாதிப்புக்குள்ளான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ.) பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைக்க, வாடகை செலவுகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ முன்மொழிந்தார்.

இதை “வாடகை நிவாரண நிதி” என்று அழைத்த அவர், போராடும் ஒவ்வொரு எஸ்.எம்.இ.-க்கும் இதுபோன்ற செலவுகளை ஈடுகட்ட, ஆறு மாத காலத்திற்கு மாதம் RM8,000 வரை விண்ணப்பிக்க அனுமதிக்குமாறு புத்ராஜெயாவை அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று காலை இயங்கலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சார்லஸ், இந்த நிதி குறித்த யோசனை, வணிகர்கள் சிலருடனான தனது உரையாடல்களிலிருந்து கிடைத்தது என்றார்.

“அவர்களுடன் பேசியதில், ​​நாங்கள் தெளிவாக உணர்ந்தது என்னவென்றால், அவர்கள் வாடகை செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர், ஏனென்றால், வாடகை அவர்களின் வணிக இயக்க செலவில் 20 முதல் 30 விழுக்காடு ஆகும்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ.) மற்றும் நிபந்தனைக்குட்பட்ட எம்.சி.ஓ. ஆகியவற்றால், அவர்களின் வணிகம் மிகப் பெரிய அளவில் குறைந்துவிட்டது… இது நாம் விசாரிக்க வேண்டிய ஒரு பிரச்சினை, வாடகை நிவாரண நிதியை ஆதரிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

உதவிகள் இல்லாமல், உள்நாட்டு பொருளாதாரத்தில் 98.5 விழுக்காட்டை உருவாக்கும் பல எஸ்.எம்.இ.-க்கள் தங்கள் வணிகத்தைத் தக்க வைத்துகொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

தனது திட்டம் குறித்து, திங்கள்கிழமை (டிசம்பர் 14) நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸை சந்திக்க உள்ளதாக சார்லஸ் கூறினார்.