அரசு ஊழியர்கள் அந்தந்த நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளைப் புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

ஒரு நிறுவனத்தில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியாக, குறிப்பாக அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது, அந்தந்த அமைச்சுகள் அல்லது துறைகளில் நடக்கும் முறைகேடுகளைப் புகாரளிக்க அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு தவறான நடத்தை குறித்தும் அரசாங்கம் தீவிரமாக இருப்பதாக பொதுச் சேவை பணிப்பாளர் தலைமை இயக்குநர் மொஹமட் கைருல் ஆடிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

“ஒவ்வொரு அமைச்சு அல்லது துறையில் நடக்கும் முறைகேடுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) அல்லது நேர்மை பிரிவுக்குத் (Unit Integriti) தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

“2010 தகவல் வழங்குவோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் 2009 சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, தகவல் தெரிவிக்கும் நபர்களின் இரகசியம் காக்கப்படும்; அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து விவரங்களும் பாதுகாக்கப்படும்; அவர்களின் பாதுகாப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.