சபாவின் கல்வி மற்றும் சமூக-பொருளாதாரச் சமத்துவமின்மைக்கு, பள்ளிக்கு மட்டம் போடும் ஆசிரியர்களே காரணம்! – ‘தியாடா குரு’

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடங்கிய ஆர்வலர்கள் குழு ஒன்று, சபாவில் தீவிரமடைந்துள்ள ஆசிரியர் வருகை பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

தியாடா குரு” (ஆசிரியர் இல்லை) என்று அழைக்கப்படும் அப்பிரச்சாரத்தின் வழி, நீண்டகால பிரச்சினையாக இருக்கும் ஆசிரியர்கள் வருகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதைப் பற்றிய பொது விவாதங்களை  ஊக்குவிக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டில் மிக உயர்ந்த வறுமை விகிதத்தைத் தொடர்ந்து அனுபவித்து வரும் சபாவில், கல்வி மற்றும் சமூக-பொருளாதார சமத்துவமின்மைக்கு மோசமடந்துவரும் ஆசிரியர் இல்லாத சூழ்நிலை அதிகப் பங்களிக்கிறது என்று அப்பிரச்சாரம் வாதிடுகிறது.

மலேசியாகினியிடம் பேசிய தியாடா குரு செய்தித் தொடர்பாளர், ஃபிகா ரோஸ்லான், இந்தப் பிரச்சாரத்தை முன்னாள் தவுன் காசி இடைநிலைப் பள்ளி மாணவி சித்தி நஃபிரா சிமான் ஊக்கப்படுத்தியதாகக் கூறினார். 2018-ஆம் ஆண்டில், படிவம் 4-ல் பயிலும்போது, தனது ஆங்கில ஆசிரியர் ஏழு மாதங்கள் வகுப்புக்கு வரவில்லை என ஆசிரியர் ஜைனல் ஜம்ரான் மீது சித்தி வழக்குத் தொடர்ந்தார்.

கோத்த பெலூட்`டைப் பூர்வீகமாகக் கொண்ட சித்தியின் வழக்கு, தற்போது கோத்த கினாபாலு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குக் காத்திருக்கிறது.

சபாவைச் சேர்ந்த ஃபிக்கா, தீவிரமடைந்துவரும் ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலையை மெத்தனமாகக் கருதும் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கம் கொண்டது தியாடா குரு என்றார்.

“ஆசிரியர் இல்லாத இந்தப் பிரச்சினை புதியதல்ல, இது மிக நீண்ட காலமாக நடந்து வரும் ஒன்று, உண்மையில் இது மிகவும் ஆபத்தானது […]

“இதற்கு முன்னர் இந்த வழியில் அல்லது இந்த அளவில் இது கவனிக்கப்படவில்லை என்பதால், வருகைதராத ஆசிரியர்கள் இது போன்ற விஷயங்களிலிருந்து தப்பிக்க முடிந்தது.

“இந்தப் பிரச்சினைக்குப் பெயரிடுவதிலும், அதைப் பற்றிப் பேசுவதிலும், அதைப் பகிரங்கப்படுத்துவதிலும், இதுவரை நடந்தது போதும் என்று மக்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம், மேலும் இதுபோன்ற பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது,” என்று அவர் விளக்கினார்.

இந்தப் பிரச்சார இயகத்திற்கு ஒரு வலைத்தளம் இருக்கிறது, மேலும் முகநூல், கீச்சகம், படவரி, திக்தோக் மற்றும் தொலைவரி போன்ற சமூக ஊடகங்களிலும் இது குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன.

மலேசியத் தேசியப் பல்கலைகழகத்தின் (யு.கே.எம்.) 1987-ம் ஆண்டு ஆய்வை சுட்டிக்காட்டி, மிக மோசமான ஆசிரியர் வருகை சிக்கல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதாக தியாடா குரு கூறியது.

2000-ம் ஆண்டில், சபா பெர்சத்து கட்சி, கல்வியமைச்சிடம், “கிராமப்புறப் பள்ளிகளில் தொடர்ந்து நிலவும் ஆசிரியர்கள் வருகை பிரச்சினை”க்குத் தீர்வுகாணுமாறு கேட்டுக்கொண்டது.

2017-ம் ஆண்டில், அப்போதையக் கல்வியமைச்சர் மஹ்ட்சீர் காலிட், வேலைக்கு வராமல் இருப்பது அமைச்சு எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஒழுங்கு பிரச்சினை என்று கூறினார். ஐந்து ஆண்டுகளாக (2,002 நாட்கள்) வேலைக்குச் செல்லாமல் இருந்த ஒரு கிராமப்புற பள்ளியின் ஆசிரியர் எவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதனை அவர் பகிர்ந்து கொண்டார்.

ஃபிக்காவின் கூற்றுப்படி, தியாடா குரு சபாவில் ஓர் அடிமட்டப் பணிக் குழுவால் நடத்தப்படுகிறது, இதில் கற்பித்தல் தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளனர்; ஆனால், வேலை ஒப்பந்தங்களில் தடைசெய்யப்பட்ட சில உட்பிரிவுகள் காரணமாக, அவர்கள் பிரச்சாரத்தில் பகிரங்கமாக தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை.

தற்போதைய மற்றும் முன்னாள், பெற்றோர்களும் மாணவர்களும் பிரச்சாரக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.

வருகை தராத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, புத்ராஜெயாவை நிர்பந்திப்பது தவிர, இந்தப் பிரச்சாரம் சித்தி நஃபிரா சிமானைப் போல, தங்கள் கதைகளைச் சொல்ல மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் என்று நம்புவதாக தியாடா குருவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஷர்மிளா சேகரன் கூறினார்.

“நாங்கள் அடிமட்டத்தில் உள்ளவர்களை – பெற்றோர், மாணவர்கள் – இப்பிரச்சாரத்தில் இணைய ஊக்குவிக்கிறோம், ‘இது எனக்கு நடக்கிறது, இதனால்தான் இது மோசமடைந்துள்ளது ’ என்று அவர்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறோம்.

“மக்கள் முன்வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று குழந்தைகளுக்கானக் குரல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவருமான ஷர்மிளா சேகரன் மலேசியாகினியின் கூறினார்.