`எதிர்பார்ப்பை நிறுத்திவிட்டு, முன்னேறிச் செல்லுங்கள்` – `ஓத்தாய் ரீஃபோர்மாசி` அன்வரைக் கேட்டுக்கொண்டது

புதிய அரசாங்கத்தை அமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று, அன்வர் இப்ராஹிம்முக்கு ஓத்தாய் ரீஃபோர்மாசி அறிவுறுத்தியுள்ளது.

அதைவிடுத்து, ஒவ்வொரு மாநிலக் கட்சித் தலைவர்களையும் அன்வர் சந்திக்க வேண்டிய நேரம் இது என்று பி.கே.ஆர். தலைவரின் தீவிர ஆதரவு குழுவின் செயலாளரான அப்துல் ரசாக் இஸ்மாயில் கூறினார்.

“தேசிய முன்னணி – தேசியக் கூட்டணி எம்.பி.க்களின் கருணை கிடைக்கும் என்ற நம்பிக்கையை பி.எச். எப்போது நிறுத்தும் என்று நாங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டோம்,” என்று அவர் கூறியதாக ஃப்ரீ மலேசியா டுடே தெரிவித்துள்ளது.

2021 வரவுசெலவுத் திட்டத்திற்குக் கொள்கை மட்டத்திலான பிரிந்திசை வாக்கெடுப்புக்கு, குறைந்தபட்சமாக 15 எம்.பி.க்களின் ஆதரவைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) பெற்றபோதே தேசியக் கூட்டணியைக் கவிழ்க்கும் முயற்சி முடிந்துவிட்டது என்பதனைப் பொதுமக்கள் புரிந்துகொண்டனர் என்று அப்துல் ரசாக் கூறினார்.

“22 அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் இதுவரை, பெரும்பாலும் தடைகள் இல்லாமல் குழு மட்டத்தில் ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போது அது மிகவும் தெளிவானது,” என்று அவர் கூறினார்.

அன்வர் தனது ஆதரவை நிரூபிக்கத் தவறிய போதிலும், அன்வார் மற்றும் டிஏபியை எதிர்க்கும் அம்னோவின் நிலைப்பாட்டை தகர்க்க இன்னும் முயற்சிகள் நடந்துவருவதாக, தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர், அன்னுவார் மூசா குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதற்கிடையில், நேற்று வாரிசான் கட்சியின் ஆண்டுப் பொது கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் மொஹமட் ஷாஃபி அப்டால், மாற்றங்களைச் செய்ய எதிர்க்கட்சிக்குத் தைரியம் இருக்க வேண்டும், ஏனெனில் இதற்கு முன் – கட்சிகளின் ஒத்துழைப்புடன் – கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடிக்க முடிந்தது என்றார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் வெல்ல பி.எச்., வாரிசான் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அப்துல் ரசாக் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.