1985-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், பினாங்குக்கு நிரந்தரமாக இலவச நீர் விநியோகிக்க வேண்டும் எனக் கூறப்படவில்லை என்று கூறி, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர், பினாங்கு மாநில அரசு ஆண்டுதோறும் RM50 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
1985-ம் ஆண்டு கெடா மற்றும் பினாங்கு (எல்லைகளை மாற்றியமைத்தல்) சட்டம் பற்றி குறிப்பிடுகையில், பினாங்கு சுங்கை முடாவின் பக்கத்திலிருந்து தண்ணீரை எடுக்க அனுமதிக்கிறது, சனுசி இந்த ஒப்பந்தம் “கெடா மாநிலத்தில் அமைந்துள்ள உலு முடாவிலிருந்து நீர் வழங்கலுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக” மட்டுமே என்று கூறினார்.
“ஓர் உத்தரவாதம் என்பது பினாங்கிற்கு நீர் வழங்கலுக்கு உத்தரவாதம் அளிப்பதை மட்டுமே குறிக்கிறது, எப்போதும் இலவசமாக நீரை வழங்க வேண்டும் என்பதற்கான உத்தரவாதம் அது அல்ல,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
“சுங்கை மூடாவில் பாயும் நீரின் ஆதாரம், கெடா, உலு மூடா வனப்பகுதி நீர்த்தாரையில் தொடங்குகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களைச் சார்ந்த 4.06 மில்லியன் மக்களுக்குப் போதுமான நீர்வழங்கலுக்கு உத்தரவாதம் அளிக்க, இப்பகுதியின் நீர் ஆதாரத்திற்கு நிலைத்தன்மையும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது,” என்று கூறிய சனுசி, இப்பகுதியைப் பராமரிப்பதற்கான செலவு கெடா மாநிலத்தின் பொறுப்பாக உள்ளது என்றார்.
“பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP), சுங்கை முடாவில் இருந்து தினமும் 80 விழுக்காடு நீரைப் பிரித்தெடுக்கிறது, இது ஒரு நாளைக்கு 1,100 மில்லியன் லிட்டர் ஆகும்; மேலும், கெடா மாநில நீர்வள வாரியம் (LSANK), கெடா மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் டாருல் அமான் நீர் நிறுவனத்திடம் (Sada) கட்டணம் வசூலிக்கிறது, அதேக் கட்டணம் PBAPP-க்கும் விதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
1985-ம் ஆண்டு உடன்படிக்கை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
“அதன்படி, இந்த நன்மைகளைப் பெறுவதாலும், பராமரிப்புச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பினாங்கு மாநில அரசும் செலவுகளை ஏற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நேற்று, பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயூ, சனுசியின் நீர் இழப்பீட்டு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க மாநில அரசு தயாராக உள்ளது என்றார்.
“இரு மாநிலங்களும் ஊடகங்களில் ஒரு “வாய்மொழிப் போரில்” ஈடுபடுவதை மக்கள் விரும்பவில்லை, ஒரு கலந்துரையாடல் தேவை… எனவே இந்த விஷயத்தை நாங்கள் விவாதிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பினாங்கு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, சுங்கை முடாவில் தனது பக்கம் சார்ந்த இடத்திலிருந்து மட்டுமே மூல தண்ணீரைப் பிரித்தெடுக்கிறது என்றும் அவர் சொன்னார்.