பி.கே.ஆர். எம்.பி : 113 எம்.பி.க்களின் ஆதரவைக் காட்ட அன்வருக்கு உரிமை உண்டு

பிரதமராக நியமிக்கப்பட, 113 எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்பதை நிரூபிக்க பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கு உரிமை உண்டு என்று பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் கரீம் தெரிவித்தார்.

“போர்ட்டிக்சன் எம்.பி.யான அன்வர், எதிர்காலத்தில் 113 எம்.பி.க்களின் ஆதரவை (அகோங்கிற்கு) காண்பிப்பார் என்ற செய்தி உண்மையாக இருந்தால், அன்வரின் நடவடிக்கை நியாயமானது என்றும், மத்திய அரசியலமைப்பின் தேவைகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நடைமுறைக்கு ஏற்ப அது இருக்கின்றது என்றும் நான் நினைக்கிறேன்.

“நான் அதை ஆதரிப்பேன்,” என்று ஹசான் மலேசியாகினியிடம் கூறினார்.

முன்னதாக, சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி, மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அன்வர் மீண்டும் யாங் டி-பெர்த்துவான் அகோங்கை எதிர்கொள்ள முயற்சிப்பார் என்று அஸ்ட்ரோ அவானி போர்டல் செய்தி வெளியிட்டது.

அன்வர் 113 எம்.பி.க்களின் ஆதரவை உறுதிமொழி அறிக்கை (எஸ்டி) வடிவில் பெற்றுள்ளார் என்று அந்த ஆதாரம் கூறியுள்ளது.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உள்ளிட்ட 10 அம்னோ எம்.பி.க்களும் அன்வரை ஆதரித்தவர்களில் அடங்குவர் என்று அஸ்ட்ரோ அவானி பின்னர் தெரிவித்தது.

இது தவிர, அன்வர் இந்த விஷயத்தை, அடுத்த செவ்வாயன்று மக்களவையில் தெரிவிக்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவியுள்ளன.

டிசம்பர் 10-ம் தேதி, பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தகியுதீன் ஹசன், நாடாளுமன்ற விவாத வரிசையில் பிரதமர் முஹைதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்காது என்று கூறியுள்ளார்.

இதற்குக் காரணம், முஹைதீன் மக்களவையின் நம்பிக்கையை இழந்துவிட்டதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை,

2021 வழங்கல் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால், பிரதமர் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று பொருள்படுமென எதிர்க்கட்சி கூறுகிறது.

“ஆனால் நமக்குத் தெரிந்த அளவில், பட்ஜெட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது (குரல் வாக்கெடுப்பு மூலம்) மற்றும் ஒப்புக் கொள்ளாதவர் வரிசையில் சில எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் மக்களவையில் உள்ள பதிவு.

“எனவே, பாகோ எம்.பி.க்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றோ அல்லது குறைந்துள்ளது என்றோ கூற முடியாது,” என்று அவர் கூறினார்.