நீர் விநியோகத்தை நிறுத்த சனுசி’க்கு தைரியம் இருக்கிறதா?

பி இராமசாமி | கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி, தவறான பல தகவல்களைப் பரப்பியதன் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இரண்டு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டதற்கான காரணத்தை நியாயப்படுத்திய பின்னர் – ஒன்று மோட்டார் சைக்கிள் பூங்காவிற்கும், மற்றொன்று ஃபுட்சால் அரங்கம் அமைக்க – தற்போது அவர் மற்ற விஷயங்கள் பக்கம் திரும்பியுள்ளார்.

கெடா மாநிலப் பாஸ் அரசு, இந்து கோவில்களுக்கு நிதி உதவி வழங்காது என்றும் அவர் கூறினார்.

அதன்பின்னர், தனது மாநிலத்தில் அரிய மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கோலாலம்பூரில் உள்ள நிறுவனம் ஒன்று, அரிய மண்ணைப் பிரித்தெடுப்பதில் சீனாவிலுள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் என்று அவர் வெளிப்படுத்தினார்.

சுற்றுச்சூழல் நிறுவனங்களும் பொது மக்களும் இது சுற்றுச்சூழலுக்கு, ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசை வலியுறுத்தின.

பினாங்கு நீர் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜசேனி மைடின்சா, அரிய மண் சுரங்கமானது கெடாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பினாங்கு மற்றும் பெர்லிஸ் போன்ற மாநிலங்களுக்கான நீர் விநியோகத்தை அது பாதிக்கும் என்றும் தொடர்ச்சியான பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டார்.

பினாங்கு மாநிலத்திற்கான 80 விழுக்காட்டிற்கும் அதிகமான நீர் சுங்கை முடாவிலிருந்து, பினாங்கு பக்க ஆற்றிலிருந்து பெறப்படுகின்றது என்றார்.

இந்த விமர்சனங்களால் எரிச்சலடைந்துள்ள சனுசி, பினாங்கு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் RM50 மில்லியனைக் கெடா அரசாங்கத்திற்கு இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இருப்பினும், பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயூ, தண்ணீரைப் பிரித்தெடுப்பதற்காக தனது அரசாங்கம் கெடாவுக்கு ஒரு சென்கூட செலுத்தாது என்று, அந்தக் கோரிக்கைக்கு விரைவாகாப் பதிலளித்தார்.

இதனையடுத்து, பினாங்குக்கான நீர் விநியோகத்தை நிறுத்தப்போவதாக சனுசி அச்சுறுத்தியுள்ளார். பினாங்கிற்கான நீர் விநியோகத்தைத் தடுக்க, ஆற்றில் மணல் மூட்டைகளை வைக்குமாறு சுங்கை முடா ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் கிராமவாசிகளைக் கேட்டுக்கொள்ளப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பினாங்கிற்கு நீர் வழங்கலைத் துண்டிக்கப்போவதாக அவர் கூறியது ஓர் அச்சுறுத்தல் மட்டுமல்ல, தேசத்துரோகமானதும் கூட.

பினாங்குக்கான நீர் விநியோகத்தைத் துண்டிப்பதில் சனுசி வெற்றி பெற்றால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் இல்லாமல் இருப்பார்கள், இதனைக் கற்பனை செய்துபாருங்கள்.

உண்மையில் சனுசி சொல்வதுபோல் நடப்பவர் என்றால், பினாங்கிற்கு நீர் வழங்கலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் அவருக்குச் சவால் விடுகிறேன்.

இதைச் செய்ய அவருக்குத் தைரியம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.