சுகாதார அமைச்சு இன்று, 1,229 புதிய கோவிட்-19 தொற்றுகளைப் பதிவாக்கியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை சிலாங்கூர் மற்றும் சபாவிலிருந்து வந்தவை.
கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பேராக் மாநிலங்களில் இன்று 100-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மறுபுறம், 1,309 பேர் அந்நோயிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர், இது இன்றையப் புதிய தொற்றுகளைவிட அதிகம்.
இன்று நால்வர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். கிளந்தான் மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒருவரும் சிலாங்கூரில் இருவரும் மரணமடைந்ததாகப் பதிவாகியுள்ளது. ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 415 எனப் பதிவாகியுள்ளது.
அவசரப் பிரிவில் 115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 65 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
புத்ராஜெயா, கிளாந்தான் மற்றும் சரவாக்கில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 435, சபாவில் 333, கோலாலம்பூரில் 131, பேராக்கில் 105, ஜொகூரில் 103, நெகிரி செம்பிலான் 29, பஹாங்கில் 28, பினாங்கில் 26, கெடாவில் 13, மலாக்காவில் 7, லாபுவானில் 6, பெர்லிஸில் 1.
மேலும் இன்று, 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
ஹூஜோங் பாசீர் திரளை – லாபுவான்; லெஸ்தாரி திரளை – சிலாங்கூர், பெட்டாலிங், உலு லங்காட், கிள்ளான், செப்பாங் மாவட்டங்கள்; டேசா இடாமான் திரளை – ஜொகூர், கூலாய் மாவட்டம்; குவாலா திரளை – பஹாங், குவாந்தான் மாவட்டம்; ரிம்புன் கட்டுமானத் தளத் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம்; தஞ்சோங் சூரியா திரளை – சிலாங்கூர், செப்பாங், கோம்பாக், கோல சிலாங்கூர் & உலு சிலாங்கூர் மாவட்டங்கள்.