பழைய எதிரிகள், இன்று மாலை ஒரே மேடையில், மகாதீர் – கு லி

அவர்களிடையிலான கடுமையான யுத்தத்தினால், ஒருமுறை அம்னோ இரண்டாகப் பிரிந்தது; ஆனால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டும் குவா மூசாங் எம்.பி. தெங்கு ரஸாலீயும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற இந்நேரத்தில், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் மகாதிர் மற்றும் தெங்கு ரஸலீ இருவரும், இன்று பிற்பகல் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்னர், அரசியல் ஒத்துழைப்புக்கான சாத்தியம் குறித்து டாக்டர் மகாதீர் தெங்கு ரஸலீயுடன் கலந்தாலோசித்த பின்னர் நடக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.

புத்ராஜெயாவைக் கட்டுப்படுத்த, பிரதமர் முஹைதீன் யாசினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையிலான உறவு பதட்ட நிலையில் இருந்தபோதிலும், முஹைதீன் தலைமையிலான தேசியக் கூட்டணியுடன், தெங்கு ரஸாலீயின் நிலைப்பாடு அம்னோவுக்குப் பின்னால் எப்போதும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.

அக்டோபர் 13-ம் தேதி, அன்வர், யாங் டி-பெர்த்துவான் அகோங் முன் ஆஜரான சில மணி நேரங்களுக்குப் பிறகு, மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருப்பதாக அவரை நம்பவைக்க, தெங்கு ரஸாலீயும் இஸ்தானா நெகாராவிற்கு அழைக்கப்பட்டார்.

இதுவரை, அன்வாரின் நடவடிக்கை வெற்றிபெறவில்லை, தெங்கு ரஸாலீயும் முஹைதீனை வீழ்த்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பரில், முஹைதீன் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்வைக்க மக்களவைக்கு கு லி ஒரு கடிதம் எழுதினார், சபாநாயகர் அசார் அஜீசன் ஹருன் அந்த விண்ணப்பத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, பட்ஜெட் வாக்கெடுப்பை அவர் புறக்கணித்தார்.

அரசாங்கத்தின் நியாயத்தன்மை நிரூபிக்கப்படாத வரை, பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கு லி வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில், தெங்கு ரஸாலீ ஒரு மாற்று பிரதமர் வேட்பாளராகவும் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த நேரத்தில் அவர் எம்.பி.க்களின் ஆதரவைத் தீவிரமாக சேகரித்து வருகிறார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக கருதப்படும் பட்ஜெட் வாக்கெடுப்பு இந்த வாரம் நிறைவடையும், முஹைதீன் பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிட்டார் என்பதை நிரூபிக்க அன்வருக்கு இது கடைசி வாய்ப்பு.

அவரை ஆதரிக்குமாறு அம்னோ எம்.பி.க்களைச் சமாதானப்படுத்த அன்வர் முயன்றார், ஆனால் அம்னோவே தற்போது பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.

அஹ்மத் ஜாஹித் ஹமிடி, நஜிப் ரசாக் போன்ற அம்னோ எம்.பி.க்கள் அன்வருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அம்னோ சார்புடைய பதிவர் இராஜா பெட்ரா கமருதீன், அம்னோ எம்.பி.க்கள் அன்வர் பிரதமராக ஆதரிகக்வில்லை, மாறாக முஹைதீனை வெளியேற்ற, அவரைப் “பயன்படுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மக்களவையில் அன்வர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது இந்த வாரம் தீர்மானிக்கப்படும்.