நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,371 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன; சிலாங்கூர், சபா, நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் மூன்று இலக்க எண்ணிக்கையில் பாதிப்புகள் உள்ளன.
இதற்கிடையில், இன்று அறிவிக்கப்பட்ட கோவிட் -19 இறப்புகளில், ஈப்போவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு இறந்த ஒரு நடுத்தர வயது பெண்ணும் அடங்குவார்.
லாபுவானிலும் பேராக்கிலும் தலா 1 மரணமும், சபாவில் 2 மரணங்களும் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 419 எனப் பதிவாகியுள்ளது.
அதேவேளையில், 1,204 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவசரப் பிரிவில் 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 62 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
பஹாங், சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 532, சபாவில் 283, நெகிரி செம்பிலான் 260, கோலாலம்பூரில் 124, பேராக்கில் 62, ஜொகூரில் 45, பினாங்கில் 31, லாபுவானில் 16, திரெங்கானுவில் 9, கெடாவில் 5, கிளந்தானில் 2, புத்ராஜெயா மற்றும் மலாக்காவில் தலா 1.
மேலும் இன்று, 2 பணியிடப் புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
சோலார் ரியா திரளை – சிலாங்கூர், கோம்பாக், செப்பாங், கோல சிலாங்கூர், பெட்டாலிங் & உலு லங்காட் மாவட்டங்கள்; சேனு செத்தியா திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம்.