நாளை, 2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாக்குகெடுப்பு பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறத் தவறினால், தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என்று டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
எம்.பி.க்கள் தங்கள் நலன்களை அல்லது பதவிகளை விட மக்களின் நலன்களைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்று மகாதீர் கூறினார்.
முன்னாள் பிரதமர் மகாதீரும் குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீக் ஹம்சாவும் நாட்டை மீட்டெடுக்கவும் மக்களுக்கு உதவவும் முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.
“நாளை ஒரு வாய்ப்பு உள்ளது, பட்ஜெட்டின் மூன்றாவது வாசிப்புக்கு வாக்களிக்கும் போது, பி.என். அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
“நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி நினைக்காமல், நாட்டைப் பற்றி சிந்திப்பார்கள் என நான் நம்புகிறேன்,” என்று தலைநகரில் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
எனது சம்பளத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை
தற்போதைய அரசாங்க அமைப்பு நியாயமானது அல்ல, முஹைதீன் சட்டபூர்வமான பிரதமர் அல்ல என்று தெங்கு ரஸாலே கருதுகிறார்.
முஹைதீன் மற்றும் பி.என். அரசாங்கத்தின் நியாயத்தன்மை நிரூபிக்கப்படாத வரை 2021 பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று, அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் முன்பு மக்களவை சபாநாயகர் அசார் ஹருனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
நாட்டின் மகிமையை மீட்டெடுக்க அவரும் தெங்கு ரஸாலீவும் சேவை செய்யத் தயாராக உள்ளதாகவும், அவர்கள் சம்பளமின்றி அதைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் மகாதீர் மேலும் கூறினார்.
“எங்கள் இருவருக்கும் சம்பளம் தேவையில்லை, அது ஒரு பொருட்டல்ல, அரசாங்கத்திடம் (ஏற்கனவே) நிறைய ஓய்வூதியப் பணம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
நாளை பட்ஜெட் 2021-ன் மூன்றாவது வாசிப்பு நாள். முதலில், கொள்கை மட்டத்தில் இருந்தபோதே இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் நிராகரித்திருக்க வேண்டும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் அதனைச் செய்யத் தவறிவிட்டார்.
அடுத்து குழு மட்டத்தில் பட்ஜெட்டிற்குக் கடுமையாக சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை எதுவும் எதிர்க்கட்சி வாக்குகள் மூலம் வெற்றிகரமாக முறியடிக்கப்படவில்லை.
மக்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளைக் கொண்டுவருவதற்கான திட்டம் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை, மாறாக தனிப்பட்ட ஆதாயம் கருதியே அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
“மேலும், கோவிட் -19 பிரச்சினையைத் தீர்க்கவும் அவர்களிடம் திட்டம் ஏதுமில்லை.
“இந்த யோசனையை வெற்றிகரமாக மாற்ற எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து இதுவரை கிடைத்த ஆதரவு எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, அது மக்களவை உறுப்பினர்களிடமே உள்ளது என்று மகாதீர் கூறினார்.
“அதேபோல், பிரதமர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க போவதும் எம்.பி.க்கள் தான்.
“அனைத்து எம்.பி.க்களும் என்னை ஆதரித்தால், நான் நாளை பிரதமராக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.