மக்களவையில் இன்று, 2021 பட்ஜெட் வாக்கெடுப்புக்கான மூன்றாவது வாசிப்பின் போது, அம்னோ, ஜாஹிட் மற்றும் நஜிப்பின் ஆதரவைப் பெறுவதற்கு, பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்படலாம் என்று மூத்தப் பத்திரிகையாளர் அப்துல் கதிர் ஜாசின் கருதுகிறார்.
நேற்று, டாக்டர் மகாதீர் மொஹமட் மற்றும் தெங்கு ரஸலீ ஹம்சா ஆகியோருடன் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, அரசியலில் சில முக்கிய போட்டியாளர்கள் இடையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெற “உண்மையில் வாழ்வா, சாவா என்ற நிலையில் மோதல் நடக்கலாம்,” என்று அவர் கருதுகிறார்.
“ஜனநாயக ரீதியாக, பிப்ரவரி மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருப்பதாக முஹைதீன் ஒருபோதும் நிரூபிக்கவில்லை.
“அதேசமயம் தனக்கு ‘வலுவான, உறுதியான’ ஆதரவு இருப்பதாக அன்வர் பலமுறை கூறி வருகிறார்.
“பிரதமராக யார் இருக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்க, தங்களிடம் போதிய எண்ணிக்கை (இடங்கள்) இருப்பதாக நஜிப்பும் ஜாஹிட்டும் நம்புகிறார்கள்,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
“நஜிப் தரப்பில், நீங்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளீர்கள், மேலும் நீதிமன்றத்தில் பல ஊழல் வழக்குகளுக்கான தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளீர்கள்.
“ஜாஹிட் தரப்பில், நீங்கள் 47 குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளீர்கள், விரைவில் நஜிப்பை போல நீங்களும் குற்றவாளியாக ஆகலாம்,” என்று அவர் கூறினார்.
கதீரின் கூற்றுப்படி, இரு அரசியல்வாதிகளும் சிறைக்குச் செல்லத் தயாராக இல்லாவிட்டால், யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், நிச்சயமாக தங்கள் விருப்பத்தைப் பரிசீலிப்பார்கள்.
முஹைதீன் பிரதமரானதிலிருந்து, பல உயரடுக்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் (டி.என்.ஏ.ஏ) ஜாமின் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நஜிப் மற்றும் ஜாஹிட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே முஹைதீனுடன் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த கதீர், அன்வர் பிரதமர் இல்லை என்றாலும், வழக்கு, நீதித்துறை மற்றும் சிறைவாசம் ஆகியவற்றை எதிர்கொள்வதில் அவருக்குத் தனிப்பட்ட அனுபவம் உண்டு என்று கூறினார்.
“அவர் இவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், பல வழிகளில் உதவ முடியும். சற்று உறுதியற்ற, நட்புபாராட்டும், ஆனால் அரச மன்னிப்பைப் பெறுவதில் அனுபவம் வாய்ந்த ஓர் அட்டர்னி ஜெனரலை நியமிக்க அவருக்கு அதிகாரம் உண்டு.”
அதனால், பிரதமராக அன்வர் வந்தால், நஜிப்புக்கும் ஜாஹிட்டுக்கும் அது தற்போது உதவியாக இருக்கும்.
“நிலைமை இப்படியிருக்க, நாடாளுமன்றத்தில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் – பதவியைத் தக்கவைக்க விரும்பும் முஹைதீனுக்கா அல்லது பிரதமராக ஆசைப்படும் அன்வரருக்கா?
“இது தனிப்பட்ட பரிசீலனைகள் மற்றும் சுயநலன்களைக் கொண்டது, மக்களுக்கு இதில் முன்னுரிமை இல்லாவிட்டால் நான் ஆச்சரியப்படப்போவதில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
முஹைதீன் தலைமையிலான அரசாங்கம் இன்று கவிழும் வாய்ப்பு இருப்பதாக நேற்று மகாதீர் கூறினார்.
இன்று, மூன்றாவது வாசிப்பில் 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்குமாறு அனைத்து எம்.பி.க்களையும் பி.எச். கேட்டுக்கொண்டுள்ளது.