மக்களவை l கோவிட் -19 தொற்றின் தாக்கத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பயணிகள் விமானச் சேவை ஏறக்குறைய 72-லிருந்து 75 விழுக்காடு வரை குறையும் என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (மாவ்காம்) எதிர்பார்க்கிறது.
தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து விமானச் சேவை முழுமையாக மீட்கப்பட மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நாட்டிலும் வெளியேயும் தொற்றுநோய் நிலைமைக்கு அது உட்பட்டது என்று போக்குவரத்து துணையமைச்சர் ஹஸ்பி ஹபிபொல்லா விளக்கினார்.
“விமானப் போக்குவரத்துத் துறையைத் திறப்பதற்கான ஏற்பாட்டில், மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) சில ஒப்பந்த வழிமுறைகள் மூலம், தரையிறக்கம் மற்றும் விமான நிறுத்தகத்திற்கான கட்டணங்களைக் குறைப்பதாக பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பு மூலம் அரசாங்கம் ஒப்புக் கொண்டது,” என்று அவர் இன்று மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வில் கூறினார்.
குறைந்தக் கட்டண விமானத் தொழிலுக்கு உதவவும், அதனை மீட்டெடுக்கவும் அமைச்சு வகுத்துள்ள பொறிமுறை குறித்து மஹ்ட்சீர் காலிட் (பி.என்-பாடாங் தெராப்) விடுத்தக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
தரையிறக்கம் மற்றும் நிறுத்தகக் கட்டணங்களைக் குறைப்பதைத் தவிர, விமானத் துறை தொழிலாளர்கள் வேலை இழப்பது மற்றும் விமான நிறுவனங்களுக்கு உதவுவது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, அமைச்சு பொருளாதார ஆலோசனைக் குழுவினரின் பல பரிந்துரைகளைப் பட்டியலிட்டுள்ளது என்று ஹஸ்பி கூறினார்.
- பெர்னாமா