மறைந்த டிஏபி தலைவரான கர்ப்பால் சிங், பினாங்கு மாநிலக் கவர்னரிடமிருந்து “டத்தோ ஶ்ரீ உத்தாமா” என்ற தலைப்பைக் கொண்ட ‘டர்ஜா உத்தாமா பங்குவான் நெகிரி ’ விருதைப் பெறுவார் என்று டிஏபி தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது.
“உங்கள் தியாகம் மறக்கப்படாது, போராட்டம் தொடர்ந்து தீவிரமடையும்” என்று அந்த இடுகையில் கூறப்பட்டுள்ளது.
பினாங்குக்குச் செல்வதற்கு முன்பு, 1974-ஆம் ஆண்டில், கர்ப்பால் முதன்முதலில் அலோர் ஸ்டார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் ஜெலுத்தோங் (1978-1999) மற்றும் புக்கிட் கெலுகோர் (2004-2014) ஆகிய தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார்.
நாட்டின் மிக முக்கியமான குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவராகப் பாராட்டப்பட்ட கர்ப்பால், அச்சமற்ற தன்மை, நேர்மை மற்றும் பல இன மற்றும் மதச்சார்பற்ற மலேசியாவிற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டார்.
பல சந்தர்ப்பங்களில் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்; 1987-ஆம் ஆண்டு, ‘ஓப்ஸ் லாலாங்’ உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், டாக்டர் மகாதீர் முகமதுவின் நிர்வாகம் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விசாரணையின்றி தடுத்து வைத்தது.
2005-ஆம் ஆண்டில், ஒரு வாகன விபத்தில் பலத்த காயம் அடைந்த கர்ப்பால், சக்கர நாற்காலியில் நடமாடத் தொடங்கினார். ஏப்ரல் 17, 2014-ம் ஆண்டில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் அவர் இறந்துபோனார்.
கர்ப்பாலின் மகன்கள் மூன்று பேர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
பினாங்கு மாநில நிர்வாக கவுன்சிலரான ஜக்டீப், உள்ளூர் அரசு, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் இலாகாவில் பதவி வகிக்கிறார்.
பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சராக பூச்சோங் எம்.பி. கோபிந்த் நியமிக்கப்பட்டார், அமைச்சர் பதவியில் இருந்த முதல் மலேசிய சீக்கியர் அவராவார்.
ராம்கர்ப்பால் 2014-இல், தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, புக்கிட் கெலுகோர் எம்.பி.யாக வெற்றி பெற்றார்.
“எனது தந்தை அரசியலில் தீவிரமாக இருந்தபோது பட்டங்களை ஏற்க மாட்டார் என்று எப்போதும் கூறினாலும், மரணத்திற்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் பினாங்குக்கு மட்டுமல்ல, தேசத்துக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளுக்கும் தகுதியானது என்று நான் நினைக்கிறேன்,” என்று ராம்கர்ப்பால் மலேசியாகினியிடம் கூறினார்.
“பினாங்கு ஆளுநரிடமிருந்து எனது தந்தையின் சார்பாக இந்த விருதைப் பெறுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.