அடுத்தப் பொதுத் தேர்தல் (ஜி.இ.) நெருங்கும் வேளையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தெளிவை மக்களுக்கு வழங்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் உடன்பட வேண்டும் என்று பி.கே.ஆர். எம்.பி. கூறியுள்ளார்.
தேசியக் கூட்டணி தொடர்ந்து அரசாங்கமாக இருப்பதைத் தடுக்க, எதிர்க்கட்சி மீண்டும் தவறியதைத் தொடர்ந்து ஹசான் அப்துல் கரீமின் அறிக்கை வெளியிடப்பட்டது, சிறு பெரும்பான்மையுடன் 2021-ம் ஆண்டு பட்ஜெட் நேற்று மகக்ளவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்தப் பாசீர் கூடாங் எம்.பி. தெரிவித்தார்.
“நீண்ட நேரம் காத்திருக்க முடியாது … உடனடியாக முடிவெடுக்க வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
ஹசானைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியின் சிறந்த பிரதமர் வேட்பாளர், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் ஆவார்.
“எதிர்க்கட்சித் தலைவரான அன்வரைப், பி.எச். பிளஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு ஜனநாயக செயல்முறை, அன்வரை முன்மொழிந்தது தனது சொந்த நிலைப்பாடு என்றார் அவர்.
மற்ற எதிர்க்கட்சிகளுடனான ஒத்துழைப்பை பி.எச். வலுப்படுத்த வேண்டும் என்றும், ஒரு பொதுவான தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஹசான் கூறினார்.
“ஜி.இ.15-யில், பி.எச் மற்றும் பி.எச். தொடர்புடைய புதியக் கூட்டணியையும் பிரதமர் வேட்பாளராக அன்வரையும் மலேசியர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தை எதிர்க்கட்சியினர் உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.