சுகாதார அமைச்சு இன்று, 1,295 புதிய கோவிட் -19 நேர்வுகளும் ஏழு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
மலேசியாவில் ஒட்டுமொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 87,913-ஐ எட்டியுள்ளது, இது சீனாவில் பதிவான 86,770 ஒட்டுமொத்த வழக்குகளை விட அதிகம்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆக அதிக புதிய நேர்வுகள் (55 %) பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து, சபாவில் (20.7 %), ஜொகூரில் (8.1 %) என பதிவாகியுள்ளது
அதேவேளையில், 1,052 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் இன்று எழுவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். சபாவில் இன்று ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன, தாவாவ்வில் மூவர் மற்றும் லாஹாட் டத்துவில் இருவர்; சுங்கை பூலோவில் ஒருவர் மற்றும் கிளந்தானில் ஒருவர் எனப் பதிவாகியுள்ளது.
கிளந்தான், இராஜா பெரும்புவான் ஜைனாப் II மருத்துமனையில் இறந்தவர், 52 வயதுடைய, கிளந்தான், மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிந்த மூத்த தாதி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரப் பிரிவில் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 53 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 481, சபாவில் 268, கோலாலம்பூரில் 232, ஜொகூரில் 105, பினாங்கில் 69, நெகிரி செம்பிலான் 60, பேராக்கில் 35, மலாக்காவில் 14, பஹாங்கில் 13, கெடாவில் 9, புத்ராஜெயாவில் 4, லாபுவானில் 3, திரெங்கானு மற்றும் கிளந்தானில் தலா 1.
மேலும் இன்று, 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
பணியிடம் சார்ந்த புஞ்சாக் கெளக்ஸி திரளை – சிலாங்கூர், கிள்ளான் & கோல சிலாங்கூர் மாவட்டங்கள்; புக்கிட் பூனாய் திரளை – சபா, கோத்தா கினபாலு மாவட்டம்; ச்சாஹாயா மசூரி திரளை – ஜொகூர், கோத்த திங்கி, பொந்தியான் & ஜொகூர் பாரு மாவட்டங்கள்; மாத்தாஹரி கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; லாவுட் கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய், செராஸ் & கெப்போங் மாவட்டங்கள்; ஶ்ரீ தாசேக் திரளை – பேராக், பேராக் தெங்கா & கிந்தா மாவட்டங்கள்; இந்தென் திரளை – பஹாங், குவாந்தான் மாவட்டம்.