கடந்த வியாழக்கிழமை ‘வீட்டில் தங்கும் ஆணை’யை (Home-stay Order – எச்.எஸ்.ஓ.) மீறி, மக்களவையில் தோன்றியதாகக் குற்றம் சாட்டி, பத்து எம்.பி. பி பிரபாகரன் மீது நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேசியக் கூட்டணி (பி.என்) எம்.பி.க்கள் பலர் அழைப்புவிடுத்துள்ளனர்.
அராவ் எம்.பி. ஷாஹிடான் காசிம் (பி.என்.), பிரபாகரன் தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறியுள்ளார், இது மக்களவையில் இருக்கும் மற்ற எம்.பி.க்களுக்கு ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
இதற்கு தஞ்சோங் காராங் எம்.பி. நோ ஓமர் உட்பட பல பி.என். எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும், மக்களவை சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருன் இந்த விவகாரத்தை முதலில் ஆராய வேண்டும் என்றார்.
கடந்த வாரம் பிரபாகரன் தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறியது தனக்குத் தெரியாது என்று அவர் முன்பு கூறியிருந்தார்.
தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் உத்தரவை மீறும் எந்தத் தரப்பினரையும் தண்டிக்கவோ அல்லது தண்டம் கட்ட உத்தரவிடவோ அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்த விஷயத்தை கொண்டு வர விரும்பும் தரப்பினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்க அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.