`அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை வையுங்கள்’ – சேவியர் ஜெயக்குமார்

நவம்பர் 6 முதல், பட்ஜெட் 2021-ன் முதல் வாசிப்பு தொடங்கியபோது, டிசம்பர் 15 வரை இது ஒரு பெரும்போராக இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

இறுதி வாக்கு எண்ணிக்கை எவ்வாறு சென்றது என்பது நமக்குத் தெரியும், இது தேசியக் கூட்டணி (பி.என்.) பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. பிரதமர் முஹைதீன் யாசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் சுமார் 17 கோரிக்கைகள் உள்ளன, ஆனால் அதை சபாநாயகர் அஸார் அஸீசான் ஹருன் பொருட்படுத்தவே இல்லை.

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் தனிநபர்களின் துரோகத்தால் தூக்கியெறியப்பட்ட காலத்திலிருந்து, பி.எச். தலைவர்கள் அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்ற திட்டமிட்டு வருகின்றனர்.

இதில், மிக முக்கியமான, வலிமையானப் பாத்திரத்தை வகிப்பவர், பி.என்-க்கு இதனை எடுத்துச் சென்றவர் வேறு யாருமல்ல, அன்வர் இப்ராஹிம்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் வீழ்த்துவதற்கும் ஒரே தலைவராக அவர் இருந்தார். ஹராப்பானின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்பார்த்ததை அடைய, அவர் மட்டுமே தனது கழுத்தை அடமானம் வைத்தார், இதற்காக நாம் அனைவரும் அவரைப் புகழ்ந்து, நன்றி சொல்ல வேண்டும். அவர் வெற்றி பெற்றிருந்தால், எல்லோரும் அவருடைய உழைப்பின் பலனை அனுபவித்து மகிழ்ந்திருப்பார்கள்.

இருப்பினும், நாடாமன்றத்தில் வாக்குகள் இழந்ததால், அவர் தோல்வியுற்றார், அவரை அகற்ற வேண்டும் என்று நாம் இப்போது சொல்ல முடியுமா?

குழு மட்டத்தில் வாக்களிப்பைத் தவிர்த்த வேறு சில தரப்பினரைப் பற்றி என்ன சொல்வது?

நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கலந்துகொண்டு, வாக்களித்திருந்தால், பல அமைச்சுகளுக்கான பி.என். பட்ஜெட்டுகள் தோல்வியுற்றிருக்கும்.

மக்களின் ஆணையை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் அன்வருக்கு நான் நன்றி கூறுவேன். நாம் அசாதாரண காலங்களில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், தேசத்தைக் காப்பாற்ற அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இதன் பொருள்.

நம்மிடையிலான பகைமையை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசத்தை உறுதிப்படுத்த முன்னேற்றகரமான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அன்வர் காரணமல்ல என்பதையும், மற்ற ஹராப்பான் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய, டாக்டர் மகாதிர் முகமது ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவின் காரணமாக இது நடந்தது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களுடன் சேர்ந்து, நாடு மற்றும் நாட்டு மக்கள் நலனுக்கான மாற்றங்களைச் செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பை நாங்கள் வழங்கினோம், அவருடைய கட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையாக இருந்தும், நாங்கள் அவருக்குப் பிரதமராக வாய்ப்பு கொடுத்தோம், ஆனால் அவர் அதை நல்முறையில் வெளிப்படுத்தத் தவறிவிட்டார்.

அரசியலைப் பொறுத்தவரை, மலேசியா மாற்றத்திற்கான நிலையில் உள்ளது. கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி செய்ய முடியாது. பி.என். அரசாங்கத்தில் தற்போது நடப்பது இதனைத் தெளிவாக்குகிறது.

அம்னோ பி.என்.-ஐ தனது துருப்பு சீட்டாக வைத்துள்ளது, அம்னோ எதை வேண்டுமானாலும் பி.என்.னிடம் இருந்து கேட்டுப்பெறலாம், பாஸ் கட்சியுடன் இணைந்து. ஊழல் எவ்வாறு உயரும் என்பதையும், நமது அரசியல் நிறுவனங்கள், சட்டவிதிகளையும் நீதியையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் அரசியல் எஜமானர்களின் பேராசைகளைப் பூர்த்தி செய்வதற்காக எப்படி பாடுபடப்போகின்றன என்பதையும் மக்கள் இனி காணலாம்

இதனை நாம் ஏற்கனவே பார்க்கத் தொடங்கிவிட்டோம், நிலையான அரசாங்கம் அமல்படுத்தப்படும் வரை இது தொடரும்.

இந்நிலையில், மாற்றத்தைக் கொண்டுவர அன்வர் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன், நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அது எந்த வழியில் என்றாலும்.


டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்