மக்களவை | பினாங்கு துறைமுகத்திற்கு அரசு நிதியளிக்கும் என்ற நிபந்தனைகளுக்கு ஏற்ப, பினாங்கு படகு சேவை தொடரும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
படகு சேவையைக் கையகப்படுத்த, பினாங்கு துறைமுகத்திற்கு RM30 மில்லியன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
“முன்னர் அங்கீகரிக்கப்பட்டது போல், ஒதுக்கீடுகள் இரண்டு வருடாந்திரத் தவணைகளில் செலுத்தப்படும் என்பதை நான் உறுதி செய்கிறேன்; அதாவது 2021-ம் ஆண்டிற்கான RM15 மில்லியன், 2021-ன் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
“மீதமுள்ள RM15 மில்லியனும் பிறகு வழங்கப்படும். அடையாளமாகவும் பாரம்பரியமாகவும் விளங்கும் பினாங்கு படகு சேவையை, பினாங்கு துறைமுகம் தொடருவதை அரசாங்கம் உறுதி செய்யும்,” என்று அவர், இன்று அரசாங்க நிதியுதவிக்கான தற்காலிக நடவடிக்கைகள் மசோதா தொடர்பான விவாதத்தை முடிக்கும்போது மக்களவையில் கூறினார்.
மசோதா மீதான விவாத அமர்வில், பினாங்கு படகு சேவை தொடர்பான பிரச்சினைகளை லிம் குவான் எங் எழுப்பினார்.
பினாங்கு படகு சேவை, அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் நிறுத்தப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 126 ஆண்டுகளாக செப்ராங் பிறை பெருநிலப்பரப்பை, மாநிலத் தீவுடன் இணைக்கப் பயன்படுத்தப்படும் படகு சேவைகள் விரைவு படகுகளுக்கு மாற்றப்படும்.
மேலும், தற்போதுள்ள படகுகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பயனர்களுக்குப் போக்குவரத்து ஊடகமாக மட்டுமே பயன்படுத்தப்படும்.
இருப்பினும், மாநிலச் செயலாளருக்கு அறிவித்தபடி, செப்டம்பர் 1 முதல் மூன்று மாதங்களுக்குப் படகு சேவையை நிறுத்தும் நோக்கத்தை முதலில் ஒத்திவைக்குமாறு மாநில அரசு போக்குவரத்து அமைச்சிடம் சமீபத்தில் கேட்டுக் கொண்டது.